செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

போதையற்ற நாட்டைக் கட்டியெழுப்ப முழு நடவடிக்கை : ஜனாதிபதி

https://lankamuslim.files.wordpress.com/2015/01/mi3.jpgபோதையற்ற நாட்டைக் காட்டியெழுப்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் அனைத்துத் தரப்பினரதும் அர்ப்பணிப்பு இதற்கு முக்கியமானது என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
போதையற்ற நாட்டைக் கட்டியெழுப்ப கடந்த காலங்களில் தாம் மேற்கொண்ட பகீரத முயற்சிகள் சம்பந்தப்பட்ட பிரிவுகளின் ஒத்துழைப்புகள் கிடைக்காததால் எதிர்பார்த்த வெற்றியளிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி போதை மற்றும் மதுபானம் தொடர்பில் தற்போதுள்ள சட்டங்களில் மாற்றம் ஏற்படுத்தி புதிய தேசிய கொள்கையொன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

கொழும்பு ஆனந்தாக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது, நாம் எமது தாய்நாட்டை சிறந்த நாடாகவும் நல்லொழுக்கம் நிறைந்த நாடாகவும் கட்டியெழுப்புவதுடன் இன்று போல் எதிர்காலத்தில் பிறக்கவுள்ள பிள்ளைகள் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழக்கூடிய நாட்டை உருவாக் குவது அவசியம். இதற்கென நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.
இது சுலபமான காரியமல்ல. எனினும் நாம் எப்போதுமே கஷ்டமானதை செய்வதிலும் சவால்களை சாத்தியமாக் குவதிலுமே நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்துள்ளோம்.
தொழில் நுட்ப வளர்ச்சியை நோக்கிய உலகில் போதைவஸ்து பற்றி நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. இலங்கையை போதையற்ற நாடாகக் கட்டியெழுப்ப நாம் பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டோம். எனினும் போதை ஒழிப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்களில் அரசாங்கத்திற்குள் நான் தனித்துப் போனதாகக் கருதுகிறேன். அந்த சந்தர்ப்பங்களில் அமைச்சர்கள் ராஜித சேனாரத்னஇ சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் எனக்குப் பூரண ஒத்துழைப்பு வழங்கினர்.
சிகரட் பெட்டிகளில் சுகாதார கேடு தொடர்பான படங்களை காட்சிப்படுத்த நாம் பாராளு மன்றத்தில் சட்ட மூலம் ஒன்றைக் கொண்டு வரும் வகையில் அமைச்சரவை அனுமதிக்கு பத்திரமொன்றை சமர்ப்பித்த போது கணக்கிலெடுக்கப்படாது அமைச்சரவை மூலம் அது நிராகரிக்கப் பட்டது.
அந்த வகையில் குறித்த சட்டத்திருத்தத்தை மேற்கொண்டால் எமது நாட்டுக்கு வெளிநாட்டவர்கள் வருகை தர மாட்டார்கள் என காரணம் காட்டி எனது முயற்சிக்கு தடை விதிக்கப்பட்டது. எனினும் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் போதை ஒழிப்பு தொடர்பில் நாம் கடுமையான கொள்கையை நாட்டில் நடைமுறைப்படுத் துவதாக தெரிவித்தோம். அதனை நடைமுறைப்படுத்த தற்போது நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக