ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ‘நல்லாட்சி’ அரசாங்கத்திற்கு நேற்றுடன் (12.06.2015) 150 நாட்கள் பூர்த்தியாகின்றன.
நல்லாட்சியின்
100 நாள் வேலைத்திட்டம் அரைகுறையாகவே நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில்,
அதிமுக்கிய 20வது அரசியல் திருத்தம் தொடர்பிலும் அரசாங்கம் தற்போது
நெருக்கடிகளை சந்தித்துள்ளது.
இந்நிலையில், வெகு விரைவில் பாராளுமன்றம் கலைக்கப்படக்கூடும் என்பதையே பலரும் எதிர்பார்த்துள்ளனர்.
இதற்கிடையில் “மக்களின்
ஆணையை மக்களுக்காக மாத்திரமே பயன்படுத்தும் பிரதிநிதிகள்
நமக்கிருந்திருந்தால் புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தில்
முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வு கண்டிருக்க முடியும்”
என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர்
ரஹ்மான் தெரிவித்திருக்கிறார்.
நல்லாட்சிக்கான
தேசிய முன்னணியின் காத்தான்குடி அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர்
சந்திப்பின்போதே அப்துர் ரஹ்மான் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்:
“புதிய அரசாங்கம் 150 நாட்களை கடந்திருக்கிறது. மார்க்க ரீதியான, கலாசார ரீதியான அச்சுறுத்தல்கள் நீங்கி சுதந்திரமான நிலைமையொன்று தற்போது உருவாகியுள்ளது. இது நாம் திருப்திப் படக்கூடிய ஒன்றே . ஆனால் அதற்கப்பாலும் நமக்கு தீர்க்கப்பட வேண்டிய ஏராளமான பிரச்சினைகள் இருக்கின்றன.
“புதிய அரசாங்கம் 150 நாட்களை கடந்திருக்கிறது. மார்க்க ரீதியான, கலாசார ரீதியான அச்சுறுத்தல்கள் நீங்கி சுதந்திரமான நிலைமையொன்று தற்போது உருவாகியுள்ளது. இது நாம் திருப்திப் படக்கூடிய ஒன்றே . ஆனால் அதற்கப்பாலும் நமக்கு தீர்க்கப்பட வேண்டிய ஏராளமான பிரச்சினைகள் இருக்கின்றன.
அவற்றைத்
தீர்த்துக்கொள்ள முடியாமல் எமது அரசியல்வாதிகள் திண்டாடிக்
கொண்டிருக்கின்றனர். தமிழ் சமூகத்தை பொறுத்தவரையில் ஆட்சி மாற்றம்
ஏற்பட்டபோது அவர்களின் தலைவர்கள் ஆட்சியிலே பங்கெடுத்து அமைச்சுப்
பதவிகளுக்கு போட்டி போட்டுக் கொள்ளவில்லை. அவர்கள் மக்களின் பிரச்சினைகளை
முதன்மைப்படுத்தினார்கள்.
வட மாகாண
ஆளுநரை மாற்ற வேண்டும் என்றனர். இராணுவம் பிடித்த காணிகளை மீட்க வேண்டும்
என்றனர். அரசியல் கைதிகளை மீட்க வேண்டும் என்றனர். இப்படியான மக்களின்
பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கின்றர்.
ஆனால்
முஸ்லிம் சமூகத்தை பொறுத்தவரையில் கடந்த அரசாங்கத்தில் இருந்ததை போலவே பல
அமைச்சுப் பதவிகளையும் பெற்று படைபட்டாளங்களோடு வலம் வருகின்றனர். ஆனால்
மக்களின் பிரச்சினைகள் தீரவுமில்லை,தீர்வாக தெரியவுமில்லை.
நிலைமை
எப்படியிருக்கின்றதென்றால் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சராக
இருக்கின்றவரால் நீர் வழங்க முடியவில்லை என மக்கள் போராட்டம்
நடத்துகின்றனர். சுகாதார இராஜாங்க அமைச்சையும் மாகாண சுகாதார அமைச்சையும்
வைத்துக்கொண்டு மூதூர் வைத்தியசாலைக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க
முடியவில்லை. இதனால் மக்கள் தொடர் போராட்டமொன்றை நடத்த வேண்டிய நிலைக்குத்
தள்ளப்பட்டுள்ளனர்.
சம்பந்தன்
சொன்னால் நடக்கிறது. ஆனால் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள்
கண்டுகொள்ளப்படுவதில்லை. ஏன் இவ்வாறு நடைபெறாமல் இருக்கின்றது?
முஸ்லிம்
அரசியல்வாதிகள் மக்கள் வழங்கிய அதிகாரத்தை பயன்படுத்தி கொந்தராத்து
வியாபாரம் நடத்தாமல் இருந்திருந்தால், தமது கட்சிக்காரர்களுக்கும்
குடும்பத்தினருக்கும் தொழில் வழங்குவதை முதன்மைப்படுத்தாமல்
இருந்திருந்தால், குற்றச்செயல்களில் ஈடுபட்ட தமது உறவினர்களை பாதுகாக்க
அரசின் சிபாரிசை எதிர்பார்க்காமலிருந்திருந்தால், பதவிகளையும் ஏனைய
வரப்பிரசாதங்களையும் முதன்மைப்படுத்தாமல் இருந்திருந்தால் தமிழ்
தலைவர்களுக்கு கிடைக்கும் மரியாதை முஸ்லிம் தலைவர்களுக்கும்
கிடைத்திருக்கும். மக்களின் பிரச்சினைகள் முதன்மைப்படுத்தப்பட்டிருக்கும்.
அவைகளை கணிசமான அளவு தீர்த்திருக்க முடியும்.
எனவே நாம் இதனை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். மக்களின்
மூலம் கிடைக்கும் ஆணையை எப்போது முஸ்லிம் பிரதிநிதிகள் மக்களுக்காக
மாத்திரம் பயன்படுத்தும் நிலைமை ஏற்படுகின்றதோ அப்போதுதான் மக்களின்
பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். மக்களின் ஆணையை மக்களுக்காக மாத்திரம் பயன்படுத்தும் பிரதிநிதிகளை தெரிவு செய்வதினூடாகவே மக்களுக்கு அரசியல் விமோசனம் கிடைக்கும்”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக