சனி, 27 பிப்ரவரி, 2016

பழையபடி நானொரு கறுப்பியானேன்.

ஏ.பி.எம். இத்ரீஸ், இலங்கையிலிருந்து சிறப்பு    அழைப்பாளராக
 கலந்து கொண்டு, 

கன்னியாகுமரிமாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற புலம்பெயர் வரலாறும் இலக்கியமும் பன்னாட்டு கருத்தரங்கை துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார். அதற்கு முன் கருத்தரங்க மலரை ஏ.பி.எம். இத்ரீஸ் வெளியிட தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றத்தலைவர் சி.சொக்கலிங்கம் பெற்றுக் கொண்டார்.ஒன்றரை மணிநேரத்திற்கும் மேலானதொரு உரையை நூற்றுக்கணக்கான மாணவியர்கள் கூடியிருந்த அவையில் அவர் மிக நுட்பமாக நிகழ்த்திக்காட்டினார்.


டயாஸ்பொரா, மைகிரேசன், எக்ஸைல்,டிஸ்பிளேஸ்மென்ட் என்பதான வேர்ச்சொற்களின் தேடலில் துவங்கி இலங்கையின் போர்ச்சூழல் தமிழர் வெளியேற்றம், அதிலும் ஐரோப்பிய நாடுகளுக்கும், இந்தியா உட்பட்ட ஆசியநாடுகளுக்கும் புலம்பெயர்தலின் வேறுபாடுகள் என பல களங்கள் பேசப்பட்டன.
உள்நாட்டுப்புலப்பெயர்வு என்றவகையில், மலையகத்தமிழர்கள், முஸ்லிம் தமிழர்கள் அவர்களது வாழிடங்களிலிருந்து துரத்தப்பட்ட வரலாறுகுறித்தும் நினைவுபடுத்தினார். இதுபோன்ற தொரு சூழல் இஸ்ரேலின் உருவாக்கமும், பலஸ்தீனியர்களின் புலப்பெயர்வும் நிகழ்ந்த வரலாற்றுத் தடங்களையும் விரிவுபடுத்தினார்.

தாயகநினைவும், புகலிட சூழலும் கலந்த ஒரு பண்பாட்டினக்கலப்பு புலம்பெயர் இலக்கியங்களில் தென்படுவதையும் வ.ஐ.ச. ஜெயபாலன் உட்பட பல படைப்பாளிகளின் எழுத்துக்களில் பதிவாகியுள்ள விதம் குறித்தும் பேசினார்..மிகவும் ரசனை சார்ந்த அதே சமயம் ஹங்கேரிய திரைமொழி, நாட்டார் பாடல்மரபு, பின்நவீனத்துவ மொழியாடல்கள், என ஒரு பல்துறைசார் உரையாடலாக அது இருந்தது.

ஒரு இலங்கையாளன், அதுவும் ஒரு முஸ்லிம் என்றவகையில் ரெட்டைபயமுறுத்தல் விசாரணையை மதுரை விமானநிலையத்தில் தான் எதிர்கொண்ட கசப்பான அனுபவத்தையும் அவர் சொல்லத் தவறவில்லை. தொடர்ந்து பிற அமர்வுகள் நடை பெற்றன..

இந்த நேரத்தில் எனக்கு எண்பதுகளில் பாலியல் வன் புணர்வால் சிதைக்கப்பட்ட கோணேஸ்வரியின் துயர வலியை தன் கவிதையில் உயிர்ப்போடு பதிந்து வைத்திருந்த ஆழியாளின் அண்மைக்கால கவிதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. பிரதேசமண்சார்ந்தும், நிறம்சார்ந்தும், நாடுசார்ந்தும், பாலினம்சார்ந்தும் அடையாள நெருக்கடிக்கடிக்குள் சிதைகிற வலி நிறைந்த கவிதை இது..

பிறந்த வீட்டில் கறுப்பி
அண்டை நாட்டில் சிலோன் அகதிப்பொண்ணு
இலங்கையர் மத்தியில் தெமள
வடக்கில் கிழக்கச்சி
மீன்பாடும் கிழக்கில் நானொரு மலைக்காரி
மலையில் மூதூர்க்காரியாகும்.
ஆதிக்குடிகளிடம் திருடப்பட்ட தீவாக இருக்கும்
என் புகுந்த நாட்டில் – அப்பாடா
பழையபடி நானொரு கறுப்பியானேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக