புதன், 23 மார்ச், 2016

எரியும் மத்திய கிழக்கில் குர்திஷ் சுயநிர்ணய போராட்டம்


குறிப்பாக, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் ரஷ்யா போன்ற புவியரசியல் கனதியுள்ள நாடுகள் குர்திஷ் சுயநிர்ண உரிமையை அங்கீகரித்துள்ளன. ;சுமலைகளும் குகைகளுமே குர்திஷ்களுக்கு நண்பர்கள் என பலரும் கூறி வந்தனர். ஆனால், இப்போது அமெரிக்கா என்ற தேசம் எம்முடன் இருக்கிறதுPP என சமீபத்தில்
மத்திய கிழக்கரசியலுக்கான வொஷிங்டன் ஆய்வு நிறுவனம்P நடத்திய மாநாட்டில் குர்திஷ்தான் பிராந்திய வெளிநாட்டு அமைச்சின் இராஜதந்திரி ஒருவர் குறிப்பிட்டிருந்தமையும் நோக்கத்தக்கது.
கடந்த ஒரு நூற்றாண்டு கால வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அகன்ற குர்திஷ் தேசியவாதம் (Pan-Kurdish Nationalism) இன்று வலிமையடைந்துள்ளதாக உணரப்படுகிறது.

இதற்கு பல்வேறு நியாயங்களைக் குறிப்பிடலாம். முதலாவதாக, மத்திய கிழக்கில் தோற்றுவிக்கப்பட்டுள்ள வன்முறைச் சூழலைக் குறிப்பிடலாம். நாடுகளது எல்லைகள் குதறப்பட்டுள்ள பின்னணியில் ஈராக், ஈரான், துருக்கி மற்றும் சிரியா மத்தியில் குர்திஷ்கள் புவியியல் ரீதியான உறவைப் பலப்படுத்தியுள்ளனர். அதனை விட, ஐ.எஸ். அமைப்பின் வன்முறைத் தாக்குதல்கள் ஈராக் மற்றும் சிரியாவின் வடக்குப் பிராந்திய குர்திஷ்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டமையும் அகன்ற குர்திஷ் தேசியவாதத்தை மேலெழச் செய்துள்ளது.
ஈராக்கில் கிர்குக், ஸின்ஞார் மற்றும் சிரியாவின் கொபானி போன்ற பிராந்தியங்கள் ஐ.எஸ். வன்முறைக் குழுவால் முற்றுகை இடப்பட்டபோது குறித்த பிரதேசங்களை விடுவிப்பதில் துருக்கியில் இயங்கும் குர்திஷ் தொழிலாளர் கட்சி மற்றும் ஈராக் குர்திஷ்தானுடைய பேஸ்மேகா இராணுவம் மற்றும் ஜனநாயகக் கூட்டமைப்புக் கட்சி போன்றவை இணைந்து எதிர்த் தாக்குதல்களைத் தொடுத்தன. ஐ.எஸ். இராணுவப் பிரிவுடன் நடைபெற்ற அதிகமான போர்களில் குர்திஷ்களது கூட்டுப்படை வெற்றி பெற்றது. இதனோடிணைந்த வகையில், மத்திய கிழக்கில் வேகமாகப் பரவி வரும் வன்முறைக் குழுக்களை அடக்குவதில் குர்திஷ்கள் மேற்குலகிற்குத் தேவையானவர்கள் என்ற விவாதமும் ஆரம்பித்துவிட்டது.

தனது சிறப்புப் பண்புகளான மதச் சார்ப்பின்மை, பலமான இராணுவம், சர்வதேச நாடுகளது அங்கீகாரம் என்பன இணைந்து குர்திஷ் தேசியத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற எதிர்பார்ப்பை குர்திஷ்களது உள்ளத்தில் விதைத்துள்ளன. வரலாற்றில் இனி எப்போதும் இது போன்றதொரு நிறைவானதொரு சந்தர்ப்பம் வரமாட்டாது என்ற அளவுக்கு குர்திஷ்கள் குர்திஷ் தேசத்தைப் பற்றிப் பேசுகின்றனர்.

உண்மையில், குர்திஷ்கள் தனித்துவமானதொரு தேசியம் என்ற அடிப்படையில் அவர்களது சுயநிர்ணய உரிமையை யாரும் மறுக்க முடியாது. கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக சர்வதேச சமூகத்தாலும் தாம் சார்ந்துள்ள அரசாங்கங்களாலும் ஓரங்கட்டப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் தங்களை சுயமாக நிர்வகித்துக் கொள்ள முடியுமான அதிகாரக் கட்டமைப்பு அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதிலும் எவரும் முரண்பட முடியாது. ஆனால், அண்மைக் காலமாக மேலெழுந்துள்ள குர்திஷ்களது தேசம் அல்லது பிரத்தியேக அதிகார அலகு பற்றிய விவாதத்தில் மூன்று முக்கியமான அவதானங்கள் காணப்படுகின்றன. முதலாவது, சமகால அரபுலகக் கட்டமைப்பில் குர்திஷ்கள் மட்டுமே பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குர்திஷ்களை அடகுவைத்து ஏனைய இனக் குழுமங்கள் அரசியல் இலாபங்களை அடைந்து கொண்டன என்ற அடிப்படையில் குர்திஷ்கள் தமது சுயநிர்ணயப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இது தவறான கணிப்பாகும்.

1916 ஆம் ஆண்டு வரையப்பட்ட சேக்ஸ்-பீகோ உடன்படிக்கையில் குர்திஷ்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. முழு அரபுலக மக்களும் பாதிக்கப்பட்டனர். கொடூரச் சர்வதிகாரம், தேசியவாதம், கலாசாரப் பன்மைத்துவத்தை அங்கீகரிக்காமை என்பன சேக்ஸ்-பீகோவின் விளைவாக அரபுலகம் அனுபவித்த இன்னல்களாகும். துருக்கியர்களுக்கு தேசம் கிடைத்தது ஆனால், அவர்களுக்கு அரசியல் சுதந்திரம் கிடைக்கவில்லை. சிரியர்களுக்கு தேசம் கிடைத்தது ஆனால், அவர்களுக்கு அரசியல் சுதந்திரம் கிடைக்கவில்லை. அதேபோல், ஈராக்கியர்களுக்கு தேசம் கிடைத்தது ஆனால், இன்று வரை அரசியல் சுதந்திரம் என்ற காற்றை அவர்கள் சுலாசிக்கவில்லை.
எனவே, இன்றைய அரபுலக ஒழுங்கினால் குர்திஷ்கள் மட்டுமே பாதிக்கப்பட்டவர்கள் என கட்டமைக்கப்படுவது மிகைப்படுத்தலாகும்.

ஆம், குர்திஷ்களுக்கு சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும். அதேபோல், மத்திய கிழக்கின் ஏனைய ஜனங்களும் தமது உரிமையை செயற்படுத்துவதற்கான சுதந்திரம் வழங்கப்படுவதை உறுதி செய்யவும் வேண்டும். எனவே, மத்திய கிழக்கு குர்திஷ் இனத்திற்கான ஒரு பிரத்தியேக தேசத்தை பிரசவிக்குமாக இருந்தால், அது ஏனைய மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் மக்களின் அரசியல் சுதந்திரம் உத்தரவாதப்படுத்தப்படும் சூழமையிலேயே நிறைவேற்றப்பட வேண்டும். இல்லாத போது, யூதர்கள் ஹிட்லரால் பாதிக்கப்பட்டார்கள் என்ற அனுதாப அலையில் பலஸ்தீனர்களது எதிர்காலத்தை குழிதோண்டிப் புதைத்த வரலாறு போன்றாகிவிடும்.
குர்திஷ்களுக்கு சுயநிர்ணயம் வழங்கப்பட வேண்டும். அது அவர்களின் உரிமையுமாகும். ஆனால், இன்னொரு நாட்டின் சுயநிர்ணயத்தை அச்சுறுத்துலுக்கு உட்படுத்தி தனது சுயநிர்ணயத்தை அடைந்து கொள்ள குர்திஷ்கள் முயற்சி செய்யக் கூடாது என பேராசிரியர் முஹம்மத் இப்னுல் முஹ்தார் ஷங்கீதி தனது டுவிட்டர் செய்தியில் பதிவு செய்திருந்தார்.

சமீபத்திய குர்திஷ் தேசியவாதம் பற்றிய விவாதத்தினுடைய மற்றுமோர் அவதானத்தை பேராசிரியர் ஷங்கீதி அடையாளப்படுத்துகிறார். அதாவது, தெளிவாகவே, தற்போது சர்வதேச வல்லரசுகள் மற்றும் பிராந்திய சக்திகள் குர்திஷ்களது சுயநிர்ணயத்தை ஆதரிக்கின்றன. ஏனெனில், அதற்கூடாக தமது அரசியல் நலன்களை அடைந்து கொள்ள அவை முயற்சி செய்வதாகும்.

இதனை மறந்து குர்திஷ்கள் செயற்பட முடியாது.
குறிப்பாக, வடக்கு சிரியாவில் வாழும் குர்திஷ்களை பலப்படுத்துவதினூடாக, துருக்கியின் பிராந்திய அதிகார வீச்சினை கட்டுப்படுத்துவது மேற்குலகின் இலக்காகும். அடுத்து, சிரியாவில் புரட்சிப் படைகளை பலவீனப்படுத்துவதற்கு குர்திஷ் படைகள் பயன்படுத்தப்படுகின்றன. இன்னும், துருக்கியின் உள்ளக ஸ்திரத்தன்மையை சிதறடிப்பதற்கும் குர்திஷ்களின் சில பிரிவுகள் துணை போயுள்ளன. மறுபுறம், மிக அண்மைக் காலத்தில் ஈரானுடைய ஏஜன்டாகவும் குர்திகளது இராணுவத்தில் சில பிரிவுகள் செயற்படுவதாக தகவல்கள் கசிந்துள்ளன. இந்நிலை நீண்ட எதிர்காலத்தில் குர்திஷ்களையும் பாதிக்கலாம் எனத் தெளிவாகவே எதிர்வுகூற முடியும்.

குர்திஷ்களினுடைய சுயநிர்ணயப் போராட்டத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் மற்றnhரு மிக முக்கியமான அவதானம் என்னவெனில், சிரியாவின் மொத்தக் குடிமக்களும் சர்வாதிகாரி அஸதின் அராஜகத்திற்குள் அகப்பட்டு திண்டாடிக் கொண்டிருக்கும் தருணத்தில், இதுவரை அந்நாட்டின் பிரஜைகளாக இருந்த குர்திஷ்கள் மாத்திரம் தமக்கான சுயநிர்ணய அபிலாஷையை அடைந்து கொள்வதற்கு இறங்கியிருப்பதாகும். இதற்காக, ஏனைய சிரியக்குடிமக்களை மறந்து, தமது சுயநிர்ணயத்திற்கு முழு உலகமும் உதவி செய்ய வேண்டும் என குர்திஷ் பிரதிநிதிகள் எதிர்பார்க்கின்றனர்.

அதனை விட குர்திஷ் போராளிகளது மிக மோசமான காய்நகர்த்தல் யாதெனில், தமக்கான சுயநிர்ணயத்தைப் பெற்றுக் கொள்ளும் இலக்கில், மொத்த சிரியர்களையும் கொன்று குவிக்கும் மொஸ்கோவுடனும் அஸதுடனும் கைகோர்த்து இயங்குவதாகும். தமது சுயநலத்திற்காக இரட்டை முகத்துடன் இயங்கும் குர்திஷ் போராளிகளால் பாதிக்கப்பட்ட அரபுகளின் வெறுப்பை நூற்றாண்டு காலம் குர்திஷ்கள் அனுபவிக்க வேண்டி வரும் என பிரபல அரசியல் ஆய்வாளர் தாஹா ஒஸான் சுட்டிக் காட்டுகிறார். குர்திஷ்களுக்கு சுயநிர்ணயம் வேண்டும் என்பது தெளிவானது. அதற்காக மொத்த சிரியர்களையும் அடகுவைக்கும் மனோநிலையை குர்திகள் விட்டுவிட வேண்டும் என அவர் எச்சரிக்கை செய்கிறார்.

இறுதியாக, கடந்த நூற்றாண்டு முழுவதும் சொல்லொனாத் துயரங்களுக்கும் அரசியல் கூட்டு வல்லுறவுக்கும் உட்பட்ட குர்திஷ்கள் கவனிக்கப்பட வேண்டியவர்கள். தனித்துவமான அரசியல் சமூகம் என்ற வகையில், அரசியல் உரிமைகளுடன் வாழும் உரிமையைப் பெற முழுத் தகுதியைக் கொண்டவர்கள். ஆனால், சமீப காலத்தில் வடக்கு சிரியா, துருக்கி மற்றும் ஈராக்கை மையப்படுத்தி இயங்கும் அகன்ற குர்திஷ் தேசியவாதம் சீரான பாதையில் நகர்த்திச் செல்லப்படவில்லை என்பதையும் குர்திஷ்கள் புரிந்து கொள்ள வேண்டும். சிக்கலான மற்றும் எரியும் மத்திய கிழக்கில் தமது சுயநிர்ணயத்திற்கான போராட்டத்தை மிகக் கவனமாகவும் பரந்த நோக்குடனும் குர்திஷ்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

மத்திய கிழக்கு குர்திஷ் இனத்திற்கான ஒரு பிரத்தியேக தேசத்தை பிரசவிக்குமாக இருந்தால், அது ஏனைய மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் மக்களின் அரசியல் சுதந்திரம் உத்தரவாதப்படுத்தப்படும் சூழமையிலேயே நிறைவேற்றப்பட வேண்டும். இல்லாத போது, யூதர்கள் ஹிட்லரால் பாதிக்கப்பட்டார்கள் என்ற அனுதாப அலையில் பலஸ்தீனர்களது எதிர்காலத்தை குழிதோண்டிப் புதைத்த வரலாறு போன்றாகி விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக