பக்கங்கள்

பக்கங்கள்

ஒரு மனிதன் ஒரு வாழ்வு. 2

 


நிழற்படங்களிலும் நிலைக்கண்ணாடியிலும் நாம் காண்பது நமது பிம்பங்களைத்தான்.நம்மை நாம் முழுமையாக  காண்பது சாத்தியமில்லை.ஆனால் நம்மை நம்மால்  மதிப்பிட்டுக்கொள்ளமுடியும்.ஏனெனில் நம்மைப்பற்றி நம்மை விட அறிந்தவர்கள் யாரும் இலர்.வாழ்வின் விசித்திரங்கள் ஒரு சர்ரியேலிஸ ஓவியம் போல் தாறுமாறாகவும் குறுக்கு மறுக்காகவும் பின்னிக்கிடக்கின்றன.இதில் எதை எழுத எப்படி எந்த என்றெல்லாம் தலையைப்பிய்த்துக்கொள்ளும்போது சும்மா இருப்பது சுகம் போல் தோன்றும்.


வாழ்வின் சில பக்கங்களையேனும் பதிவு செய்ய வேண்டும் என்ற உந்துதல் உள்ளே தள்ளிக்க கொண்டடிருப்பவனுக்கு மொடன் ஆட்டைப் போன்று (modern art) நான்கு கோடுகளை யேனும் கீறிவிட வேண்டும் என்ற வைராக்கியம் எங்கிருந்தோ வந்து விடுகிறது.டனக்கர் சொல்வது போல் தன் வரலாறு பெரும்பாலும் வாழ்வுக்கான அர்த்தத்தை,முழுமையைத் தேடும் முயற்சி.ஆனால் நாம் சில வேளை எமக்கே அன்னியர்களாய் இருந்து விடுகிறோம்.


40வயதில் நிறுவனமும் தனிமனிதனும் முதிர்ச்சியடைகிறார்கள்.40ஆவது அகவையில் இலங்கை முஸ்லிம் சமூகம் பற்றிய ஒரு profile ஐ ஆய்வு நோக்கில் வெளியிட முடிந்தது.ஆனால் தன் வரலாற்றை நூலாக வெளியிட முடியாமல் போயிற்று.நாம் ஒன்று நினைக்க தெய்வம் இன்னொன்று நினைக்கிறது man proposes God disposes என்று சும்மாவா சொன்னார்கள்?உண்மையில் எழுதுவதற்கு ஓர் அலாதியான mood அவசியம்.உடல் உள உற்சாகம் வேறு வேண்டும்.ஓய்வும் வேண்டும்.


பெய்ஸ் நாக்கு மரப்பதற்கு முன் நமது உடல் அழிவதற்கு முன் என்கிறார்.நான் இன்னும் இரண்டு வரிககளைச்சேர்க்க விரும்புகிறேன்.பார்வை எங்கோ நிலை குத்தி திசை தெரியாது மங்குவதற்கு முன்,நமது கைகள் அசைவியக்கமின்றி அடக்குவதற்கு முன், dementia நம்மைப் பீடிப்பதற்கு முன்,இதயம் தனது துடிப்பை நிறுத்திக் கொள்ள முன்,ஒவ்வொருவரும் தமது கடந்த கால வாழ்வை ஒருமுறையேனும் திரும்பிப்பார்க்க வேண்டும்.அதைப்பதிவு செய்தால் அதுவும் பயனுள்ளது.எஞ்சியுள்ள வாழ்வுக்கான பாடங்களையும் படிப்பினைகளை யும் அங்கிருந்தே நாம் அனேகம் பெறலாம்.நம்மைச்சுற்றியுள்ளவர்களுக்கும் அதில் பாடம் கற்கலாம்.


இதில் நமக்கொரு அறைகூவலும் காத்திருக்கிறது.ஒட்டுமொத்த கடந்த காலத்தையும் அத்துப்படி யாக ஆவணமாக்கல் சாத்தியமா? அந்தரங்கம்,சிதம்பர ரகசியங்கள்.நேர்மையீனங்கள்,ஒழிவு மறைவுகள்,தலைக்குனிவுகள்,கள்ளத்தனங்கள் என்று ஏராளமான விஷயங்கள் அதற்குள் அடங்கியுள்ளன.ஏமாற்றங்கள், சுய தோல்விகள்,மனச்சாட்சிப்போராட்டங்கள் எனவும் வாழ்வு நீள்கிறது.இன்னொரு புறம் நமது நினைவுப்பரப்பில் அத்தனை காட்சிகளும் நிழலாடவில்லை.ஆதலால், ஞாபகத்தின் மூலை முடுக்கி லிருந்து வாழ்வைத் தூசு தட்டி எடுக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் எனக்கில்லை.ஏன்? 25 ஆண்டுகால குறிப்பேடுகள் என்னிடம் பத்திரமாகவுள்ளன.


ஆயினும் அவை எல்லாவற்றையும் கடந்து பதிவுகள் நமக்கு மன ஆறுதலைத் தருபவை.கடந்தகால வாழ்வைத் திரும்பிப்பார்க்க வைப்பவை.ஒட்டுமொத்த வாழ்வையும் ஒரு முறை எண்ணிப்பார்க்கும் உளச்சுகத்தையும் சுவாரஷ்யங்களையும் தருபவை.நாம் பெற்றதும் இழந்ததும். மகிழ்ந்ததும் வருந்தியதும் எதிர்பார்த்ததும் ஏமாந்ததுமான அனுபவங்கள் நமது வாழ்வை வார்த்தெடுத்தவை.காலத்தின் தூசு படிந்த புகைப்படத்தை போல் நம் முன்னால் மீள் மீளத் தோன்றுபவை.வாழ்க்கை என்றால் என்ன என்ற தத்துவ விசாரணையைக் கடந்து ,நீ கழித்த நாட்கள்தான் உன் வாழ்க்கை என்ற இமாம் ஹஸனுல் பஸரியின் வார்த்தை நம் முன் விரிகிறது.


வாழ்வை அளந்து வாழ்ந்தவர்கள்.அதன் கணங்களில் ஒய்யாரமாக உட்கார்ந்தவர்கள்.அதன் அழகியல் தார தம்மியங்களை மொளனமாய் அசைபோட்டவர்கள்.அதன் விசித்திரங்களை கண்டு வியந்தவர்கள்,அதனை அனைத்துக் குறைகளோடும் ஏற்றுக் கொண்டவர்கள்,ஒவ்வொரு நிமிடத்தையும் தமது உழைப்பாலும் உன்னத முயற்சிகளாலும் அர்த்தப்படுத்தியவர்கள்,படிவார்ப்புசிந்தனையிலிருந்து (stereotype)தம்மை விடுவித்துக் சாதனை புரிந்தவர்கள் பெரும்பாலும் இவர்கள்தான் இறந்தகால பண்பாட்டுப் பிரக்ஞை உள்ளவர்கள் (cultural nostalgia).அவர்கள் தான் தன் வரலாற்று எழுதுனர்கள்.


நம்மால் என்ன செய்ய முடியும் என்பதை வைத்து நம்மை நாம் எடை போடுகிறோம்.நாம் இதுவரை எதைச்சாதித்துள்ளோம் என்பதை வைத்து பிறர் நம்மை எடைபோடுகிறார்கள்.புறத்தே உள்ள உலகத்தையே மக்களால் பார்க்க முடிகிறது என்பதை நாம் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.சிலர் மௌனச்சாதனையாளர்களாகவும் இருக்க முடியும்.சிலர் ஆர்ப்பாட்டமான ஆளுமைகளாகவும் மிளிர முடியும்.ஆனால் ஒவ்வொரு மனிதனும் ஒரு அனுபவக்களஞ்சியம் என்பதில் ஒன்றுபடுகிறார்கள்.அவர்களுக்குள்  எத்தனை சமாச்சாரங்கள்,சம்பவங்கள்,பாதைகள்,பயணங்கள்,இனிய கசப்பான அனுபவங்கள்!.இவற்றை அனைவரும் சாகாவரம் பெற்ற ,ஈர்ப்பு விசை கொண்ட இலக்கியமாக மாற்றுவதில்லை.அவற்றை முறையாகத் தொகுத்து அழகியல் தாரதம்மியங்களுடனும் கலை நயத்துடனும் உரையாடும்போது வாழ்க்கை அர்த்தம் பெறுகிறது.முழுமை அடைகிறது.இதுதான் இந்த எழுத்துக்கான உந்து விசை. 


எமது சமூகப்பரப்பில் நிறுவனங்கள் ஏராளம்.அவற்றின் செயலாற்றுகைகளும் ஏராளம்.ஆனால் செறிவான மாற்ற அலைகளை அவை உருவாக்கியுள்ளனவா என்பது ஒரு பெரிய கேள்வி!.ஸ்தாபகம்,முதற்தொகுதி உழைப்பாளர்கள்,உண்மைத்தியாகிகள்,களப்பணியாளர்கள்,இருக்க இடையில் புகுந்தவர்களும்,கதிரைகளுக்கும் பதவிகளுக்கும் ஏங்கிக்கிடப்பவர்களுமே அந்த நிறுவனங்களின் high profilesஆக தம்மை தகவமைத்துக் கொண்ட ஒரு விசனம் கசிந்த வரலாறு நமக்குள்ளது.ஆக  வரலாற்றுத் திருடர்கள் புடைசூழ்ந்து நிற்க,உண்மையான பதிவுகள் அற்றுப் போய்விடுமோ என்ற அச்சம் எம்மை விரவ,அசகு பிசகின்றி நமது சமூக வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கையளிக்க வேண்டும் என்பது இந்த எழுத்துக்கான இன்னோர் உந்துதலாகும்.

சந்திப்போ)மறில் சந்திப்போம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக