ஒரு மனிதன் ஒரு வாழ்வு 3


நமது வாழ்வில் நம்மைச் சூழ்ந்துள்ள இரண்டாவது வளையம் நமது உறவுகள்.உறவுகளின்றி நமது வாழ்விற்கு உயிர்ப்பில்லை.இந்த உலகில் எல்லாமும் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கிறது.மாறாதிருப்பவை மானுட உறவுகள் மாத்திரமே.அவற்றின் இழைகள் அறுந்து விட்டால் எல்லாமே அர்த்தம் இழந்து போய்விடும்.இந்தப் பேசு பொருளையும் பேச வேண்டும் என்பது என்னை எழுத உந்திய இன்னொரு காரணியாகும்.


எழுத்தாளர்கள் என்போர் எப்போதும் விளம்பர வெளிச்சத்தில் நனைய வேண்டும் என்பதற்காக போலித்தனமாகவும் நாடகத்தனமாகவும் செயல்படுவதை நான் பார்த்திருக்கிறேன்.வாழ்வை உணர்வின் தீவிரத்தால் அடையாளம் காண விளைபவனின் ஜீவ அவஸ்தைகளை எந்த நாடகத்தனமும் இல்லாமல் பதிவு செய்ய முயல்கிறேன்.வாழ்வை அதனுடன் ஒட்டியுள்ள ஒழுங்கீனத்தின் நிறங்களுடன்,அதன் கொந்தளிக்கும் கவிதையுடன்,உண்மை உணர்வுடன் முழுவதுமாக வெளிப்படுத்த முயல்கிறேன்.


நான் சந்திக்கும் மனிதர்களின் தோற்றத்தை அங்குல அங்குலமாக அளக்கும் ஆற்றல் என் கண்களுக்குண்டு.அவர்தம் ஒவ்வொரு அசைவினதும் பொருளை உணரும் திறன் என் நெஞ்சுக்கு உண்டு.சமகால சமூக செல்நெறிகள் மீதான விமர்சனமும் இறந்த காலத்தின் மீதான பரந்த பார்வையும் என் அறிவுக்கு உண்டு.ஆதலால் இந்தப் பதிவு வெறுமனே ஒற்றை மனிதனைச் சுற்றி வரும் வளையங்களோ விம்பங்களோ அல்ல.தனியொருவனின் மன உழைச்சல்களுமல்ல.


எனக்குப் போதித்தவர்கள் ;என்னைப் பாதித்த வர்கள்;என்னைச்சோதித்தவர்கள்;நான் நேசித்தவர்கள்;யாசித்தவர்கள்;நான் எதிர்கொண்டவர்கள்.புதிர்கொண்டவர்கள்.ஒடுக்கப்பட்டவர்கள்.ஒதுக்கப்பட்டவர்கள்.அடக்கப்பட்டவர்கள்.முடக்கப்பட்டவர்கள்.ஏணியாய் இருந்தவர்கள்.தோணியாயத்திகழ்ந்தவர்கள்.கை கொடுத்தவர்கள்.காலால் உதைத்தவர்கள்.உற்சாகம் தந்தவர்கள்.உதறிவிட்டுச்சென்றவர்கள் உலகை அதன் அனைத்துக் குறைகளோடும் நேசித்த அபூர்வ மனிதர்கள்.அனைவரும் இந்த எழுத்தில் கரைந்திருக்கிறார்கள்.


கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களில் வாழ்வின் கடந்தகால அனுபவங்களையும் பண்பாட்டுப் பின்னோக்கிய பிரக்ஞையை யும் cultural nostalgia மேலும் செறிவாக்க எடுக்கும் முயற்சியே இந்தப்பதிவு.இந்த சொற்கள் பல குரலில் பேசுகின்றன.சில புதிரானவை.சில மர்மமானவை.சில வெளிப்படையானவை.சில வினோதமானவை.சில அர்த்தமானவை சில அபத்தமானவை.சில இயல்பானவை சில ஈர்ப்பானவை.சில இனிய காலம் பற்றியவை.சில இருண்ட காலம் பற்றியவை.விரிவான களங்களில் மாறுபட்ட காலங்களில் வேறுபட்ட பார்வைகளில் சம்பாதித்துச் சேமித்து வைத்த  அனுபவங்களை ஒர் ஈர்ப்பு விசையுடன் கையளிக்கும் முயல்களை இது.


இதை வாசிப்பவர்கள் இங்கு வரும் மறக்க முடியா மனிதர்களின் வாழ்விலிருந்து ஒரு சொட்டையேனும் எடுத்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு .இனி பாறைகளின் இடுக்கில் முளைப்பது செடியல்ல ஒரு நம்பிக்கை என்ற உறுதியோடு உரையாடலுக்கு வழிவிடுகிறேன்.எனது சொற்கள் மழைத்துளி போல் புதிதாய் காற்றைப்போல் சுதந்திரமாய் நதியைப்போல் உற்சாகமாய் இருக்க எதிர்பார்க்கிறேன்.


இன்னொன்றில் சந்திப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக