சிறுகதை :- நிகாஹ்

வஸீலா தலை முக்காட்டைக் களைந்து குளிர்ந்த தண்ணீரால் முகத்தில் அறைந்து கொள்கிறாள்.
அப்பாடா’ என்றொரு ஆசுவாசம் தொற்றிக் கொள்ள மெல்ல நிமிர்கிறாள்.
இரசம் போன கண்ணாடியில் அவள் முகம். முன்னுச்சியில் சில நரை முடிகள். இளநரையாக இருக்கும் என்றொரு மனச்சமாதானத்துடன் சமையலறைக்குள் செல்கிறாள்.
உம்மா கீரை ஆய்ந்து கொண்டிருப்பது தெரிகிறது.
சமையல் மேடையில் தேநீர் ஆறிக் கொண்டிருக்கிறது.
வஸீலாவைக் கண்டதும் உம்மாவிடமிருந்து உஷ்ணமாய் ஒரு பெருமூச்சு.இருக்காதா பின்னே,முப்பத்தி நாலு முப்பத்தைந்து வயதில் பேரிளம் பெண்ணிருக்கும் தாயின் சொல்லொணா வேதனையின் மூச்சு அது.
அவள் வயது தோழிகளெல்லாம் திருமணமாகி குழந்தை குட்டிகளோடு வலம் வரும் போது வஸீலா இன்னும் மாப்பிள்ளைக் கனவுகளோடு காலம் தள்ளவாகி இருக்கிறது.

வெள்ளை நிறமும் காந்தக் கண்களும் தான் அழகென்றால் அவள் அழகியில்லை.வஸீலாவின் மென்மையான அதிர்ந்து பேசாத குணமும் கனிவும் அழகு தான் ,ஆனால் அவை திருமணச் சந்தையில் விலை போகவில்லை.
வயது ஏற ஏற அவள் எல்லோர் மனதுக்கும் சுமையாகிப் போனாள்.
‘எனக்கும் ஒருவன் இருப்பான் எங்காவது’ என்ற குறைந்த பட்ச நம்பிக்கை கூட இப்போது வருவதில்லை வஸீலாவுக்கு.
ஊசி தைக்கிறாப் போல் அனுதாபங்களின் பெயரில் சீண்டல்கள்.
உம்மாவை எல்லா இடங்களிலும் கேள்விகளால் துளைத்தெடுக்கிறார்கள்.
இப்போதெல்லாம் திருமண வைபவங்களுக்கு மறந்தும் அவள் போவதில்லை.
வளர்ந்த குழந்தைகள் இருக்கும் ஆண்களுக்குக் கூட மனைவியை இழந்தவுடன் இன்னொரு மணப்பெண் இலேசாகக் கிடைத்து விடுகிறாள்.
‘அல்லாஹ்வே எண்ட பிள்ளைக்கொரு வழியக் காட்டு நாயனே’ என்ற உம்மாவின் இரங்கல்கள் தொழும் பாயில் ஈரமாக விழுவதை வஸீலா இரகசியமாகக் கண்டிருக்கிறாள்.
டொக் டொக்‘எனக் கதவு தட்டப்பட ‘ஸலாமலைக்கும்’ என்ற குரலும் கேட்கிறது. 'ஆண்டி இவன் அஸ்லம்'
ஆயிற்று, எல்லாமே கனவு போலத் தான் இருக்கிறது.அஸ்லம் குடும்பம் ஊருக்குப் புதிதாக வந்தாலும் மரியாதையான குடும்பம்.வலிய வந்த சீதேவி.அஸ்லம் அவனுடைய நண்பனுடன் வந்து பெண் கேட்டான்.
திருமண நாள் குறித்தாயிற்று
வஸீலாவின் முகத்தில் புதுக்களை.மணப்பெண்ணுக்குரிய நாணம்.உம்மாவும் வாப்பாவும் உற்சாகமாக வலம் வருகிறார்கள்.
.
மாப்பிள்ளை வஸீலாவோட கொஞ்சம் பேசணுமாம்.
தூய விரிப்புகள், திறந்த யன்னல் தூரத்தில் வாப்பா பார்த்தும் பார்க்காதது போல நின்று கொண்டிருக்கிறார்.ஹப்பா அவர் முகத்தில் தான் என்ன மலர்ச்சி,மகளுக்கு கல்யாணம் ஆகப் போவதன் சந்தோஷம் அப்பட்டமாகத் தெரிகிறது.
செம்மஞ்சள் நிற சல்வாரின் துப்பட்டா மூலை வஸீலாவின் கையில் கசங்கியது நிலை கொள்ளாமல் நின்றிருந்தாள்.
அஸ்லம் நாற்காலியொன்றில் வசதியாக உட்கார்ந்து கொண்டான்.கொஞ்ச நேரம் தயக்கம் அங்கே படர்ந்திருந்தது.
‘வஸீலா ம்ம் இரீங்க’
அவளும் நாற்காலியொன்றின் நுனியில் இருந்து கொண்டாள்;தேகம் குப்பென்று வியர்த்து முகம் சிவந்ததிருந்தது.
‘சொன்னா பிழயில்ல எண்டு நெனக்கிறன், உங்களுக்கு தெரியுமோ தெரியா, ஆனா நான் ஓல்ரெடி கல்யாணம் முடிச்சவன்…..
அதிர்ந்தாள்.
‘நாங்க ஒரு வருசம் ஒண்டா வாழ்ந்தோம்,பிறகு அவக்கு என்னோட பிரச்சன,பொறகு டிவோர்ஸ்’
வஸீலாவின் இறக்கைகள் வானத்திலிருந்து இறங்கின.
ஆனாலுமென்ன பரவாயில்லை,ரொம்ப நல்லவரா இருக்கிறார்.
‘அதெனக்குப் பிரச்சின இல்ல’ மென்மையாக வஸீலா மனதை மொழிபெயர்த்தாள்.சிறகுகளைப் பொறுக்கினாள்.
‘நா சொல்ல வந்ததது…..அஸ்லம் ஒரு நிமிடம் நெற்றியைச் சுருக்கி யோசித்தான்.
‘அவள் மெளனித்தாள்.
‘இப்ப அவ நேத்து கோல் எடுத்திருந்தா,அவக்கு திருப்பி என்னோட சேர்ந்து வாழ்ரதுக்கு விருப்பமாம்’
வஸீலாவின் நெஞ்சாக்கூட்டுள் கல்லொன்று விழுந்து அமுங்கியது.நாக்கு உலர்ந்து போனது.
இவர் என்ன சொல்கிறார்.
‘அதனால என்ன மன்னிச்சிடுங்க, ஒரு வருஷம் ஒண்டா வாழ்ந்தவங்க நாங்க’
‘நான் ரெண்டாவது வைப் ஆக இருந்தாலும் ஓகே….
வஸீலாவின் குரல் அவளுக்கே அந்நியமாய் கிணற்றுக்குள்ளிருந்து ஒலிப்பது போல இருந்தது.ஏனோ மனசுக்குள் உம்மாவின் சிரித்த முகம் வந்து போனது.
‘இல்ல .அவக்கு அப்டி விருப்பம் இல்ல, சொரி, அப்ப நான் வாறன்’
அஸ்லம் அவசரமாக வெளியேற வஸீலாவின் தலை சுற்றத் தொடங்கியது.
‘உம்மோவ் .........
எனக்கு..... எனக்கு கல்யாணமே வேணாம்மா’
அவள் கண்ணீர் பொங்கி சப்தமாகக் கேவத் தொடங்கினாள்.
சமீலா யூசுப் அலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக