ஒரு மனிதன் ஒரு வாழ்வு

 ஒரு மனிதன் ஒரு வாழ்வு

( கலாநிதி ரவுப் ஷெய்ன்)

கடந்த கால வாழ்வியல் அனுபவங்கள் -சில முற்குறிப்புகள்



கடந்த 25 ஆண்டுகள் என்பது என் வாழ்வில் ஓர் அனுபவச்செழுமையை உருவாக்கிய காலம். பல்வேறு களப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு எனக்குக் கிட்டிய ஒரு கால் நூற்றாண்டாகவே அதை நான் பார்க்கிறேன்.சமூகத்தின் பல்வேறு தளங்களோடும் களங்களோடும் ஊடாடிய எனது அனுபவப் பரப்பில் எத்தனையோ சுவாரஸ்யமான பதிவுகள் உறைந்து கிடக்கின்றன.


குத்துமதிப்பாக கடந்த 25 ஆண்டுகளில் 5 இலட்சம் கிலோ மீட்டர் பயணம் உள்நாட்டில் மேற்கொண்டிருக்கிறேன்.கிட்டத்தட்ட 750 முஸ்லிம் கிராமங்களையும் நகரங்களையும் பார்த்திருக்கிறேன்.பல்கலைக்கழகங்கள்.பாடசாலைகள்.பள்ளிவாயல்கள்.சமூக நிறுவனங்கள்.அமைப்புகள்.என பலவகைப்பட்ட நிறுவனங்களின் வளவாளராகப்பணியாற்றியுள்ளேன்.எத்தனையோ விதம்விதமான மனிதர்கள்.எத்தனையோ விதம்விதமான ஆளுமைகள்!.இவற்றை எல்லாம் பின்னோக்கிப் பார்க்க வேண்டும் எனும் ஒர் உணர்வு நதி எனக்குள்  ஊடுருவிப் பாய்கிறது.இந்த அனுபவங்களை எல்லாம் ஆவணமாக்க வேண்டும் என்ற பேரவா என்னை கடந்த ஆறாண்டுகளாக விரட்டியபடி உள்ளது.சோலிகளாலும் சில வேலிகளாலும் அதனை நூலாக்கம் செய்ய முடியாமல் போயிற்று.உண்மையில் இது என்னைப்பற்றியது மட்டுமல்ல.நான் வாழ்ந்து வரும் சமூகம்.நிறுவனங்கள்.ஆளுமைகள் என எல்லோரையும் பற்றியதுதான்.இனி விடயத்திற்கு வருவோம் இங்கே ஒரு முற்குறிப்பு சமர்ப்பணம் .அதுவும் பெய்ஸ் அஹ்மத் பெய்ஸ் எனும் ஓர் அற்புதமான கவிஞரின் வரிகளோடு....


பேசு உன் உதடுகள் சுதந்திரமானவை

பேசு உனது நாவு இன்னும் உன்னுடையதே.

உனது கட்டுடல் இப்போதும் உன்னுடையதே

பேசு உன் வாழ்க்கை இப்போதும் உன்னுடையதே


உலைக்களத்தின் உள்ளே பார்

எழுந்தாடும் தீயின் நாக்கு

பழுத்துச் சிவந்த இரும்பு

பூட்டை உடைத்து வாயை அகலத்திற

சங்கிலிகளைப்பிய்த்தெறி


எஞ்சியிருக்கும் பொழுதுகள் கொஞ்சம்தான்

என்றாலும் நீ பேசு

உடல் அழிந்து போகு முன்

நாக்கு மரத்துப்போகு முன்

உண்மை இப்போதும் உயிருடன் தான் உள்ளது

சொல் நீ சொல்ல வேண்டியதைச்சொல். 

   

பெய்ஸ் அஹ்மத் பெய்ஸ்(துரோகத்தின் தருணம்)


நான் சொல்ல வேண்டியதைச் சொல்ல இந்தப்பத்தியைப் பயன்படுத்துகிறேன்.தன் வரலாறு எழுதுதல் கொஞ்சம் கடினமானது.ஆனால் நினைவுபடுத்தச் சுலபமானது.காலத்தின் இடுக்குகளில் ஒட்டிக் கொண்டிருப்பது மனக்கண்ணாடியில் மங்கலாகத்தெரிகிறது.அவற்றை எழுத்தில் இறக்கி வைப்பது அவ்வளவு எளிதல்ல.உதிரிகளற்ற வார்த்தைகளில் உண்மைகள் அத்தனையையும் உள்ளவாறு  உய்த்துணர்வது சற்றுக் கடினமான ஒன்றுதான்.ஏனெனில் விரல் தன் நுனியைத்தொட முடியாது.கத்தி தன்னையே காயப்படுத்திக் கொள்ள முடியாது .அதுபோல் மனமும் தன்னை முழுமையாக பார்த்துக்கொள்ள முடியாது.நம்மை நாம் முழுவதும் பார்ப்பது சாத்தியமில்லை.ஒருவரைப்பற்றி எழுதுவதென்றால் அவர் அணிந்திருந்த சட்டையையையும் அதில் இருந்த பொத்தான்களையும் பற்றியதுதான் அந்த எழுத்தாக முடியும் .உண்மையில் அவரைப்பற்றி முழுவதும் எழுதுதல் சாத்தியமில்லை.பிறரைப்பற்றி நாம் எழுத முடியாதது போல் நம்மைப்பற்றி யும் நாம் முழுவதும் எழுதுதல் சாத்தியமில்லைதான்.எனினும் நாம் நம்மைத் திரும்பிப்பார்க்க முயல்கையில் நமக்குள் ஊற்றெடுக்கும் உணர்வலைகளை ஓரளவு எழத்தில் வடிக்கலாம்.  (தொடரும்)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக