செவ்வாய், 27 செப்டம்பர், 2022

ஒர் உலக ஜாம்பவானின் மரணம்


அல்லாமா முஜத்தித் முஜ்தஹித் முபஸ்ஸிர்.முஹத்திஸ்  இமாம் கர்ழாவி (றஹ்) வாழ்வும் பங்களிப்பும்


அவரது சிந்தனைகள் கருத்துக்களை முன்வைத்து சில குறிப்புகள் -01


இமாம் யூஸுப் அல் கர்ழாவி அவர்கள் இந்நூற்றாண்டில் வாழ்ந்து மரணித்த முஜத்தித்களில் ஒருவர். இஸ்லாமிய தஃவா களத்தில் சுமார் ஏழு தசாப்த அனுபவங்கள்  கொண்டவர். உலகின் பல்வேறு நாடுகளிலும் பல்லாயிரக்கணக்கான அறிவு ஜீவிகளை உருவாக்கிய பேராசிரியர். கோடிக்கணக்கான முஸ்லிம்களின் உலக ஆதர்ஷம். இஸ்லாமிய நிலைக்களனில் ஓர் உலக நாயகன். அரை நூற்றாண்டுக்கு மேல் தனது பேனை முனையில் போராட்டம் நடாத்திய எழுத்தாளர். கலை இலக்கியத்தில் பேரார்வம் கொண்ட புதுக் கவிஞர். அவரது ஒவ்வொரு நூலையும் வாசிக்க கையில் எடுக்கும் போது ஒரு புதையலுக்குள் புகும் புதிய அனுபவம்.


அறபு உலகைக் கடந்து உலக முஸ்லிம்களால் மதிக்கப்பட்ட மாணிக்கம் அவர். கர்ழாவி அவர்கள் இஸ்லாமிய உலகுக்கு வெளியே சிறுபான்மையாக முஸ்லிம்கள் வாழும் நாடுகளுக்கும் பயணம் செய்தவர்.அவர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு ஷரீஆ அடிப்படையில் தீர்வுத்திட்டத்தை முன்வைத்தவர்.முஸ்லிம்கள் உலகில் எங்கு வாழ்ந்தாலும் இஸ்லாமிய தனித்துவத்துடன் வாழ வேண்டும் என்பதில் அவர் காட்டிய ஆர்வமும் அக்கறையும் தனித்துவமானது. அதனால்தான் சிறுபான்மை வாழ்வியல் குறித்து அவரது பிரத்தியேகமான பிக்ஹுத்துறை ஆய்வுகள் விரிவடைந்தன. அது தொடர்பில் அவர் விரிவாக எழுதினார்.


இத்துறை சார் பிக்ஹு நூல்கள் அரிதிலும் அரிது. மஜ்லிஸுல் அவ்ரூபி லில் புஹூதி வல் பத்வா (ஆய்வுக்கும் பத்வாவுக்குமான அய்ரோப்பிய சபை) உருவாக்கத்திலும் வழி நடாத்தலிலும் அல்லாமா கர்ழாவி அவர்களது பங்கு மெச்சுதலுக்குரியது. அம்மன்றம் அய்ரோப்பிய நாடுகளில் கடந்த மூன்று தசாப்தங்களாக நடாத்தி வந்த ஆராய்ச்சி மாநாடுகளில் உத்வேகத்துடன் பங்குபற்றிய அல்லாமா அவர்கள் அம்மன்றத்தை வழிநடாத்துவதிலும் முன்னணிப் பங்கினை ஆற்றியுள்ளார். இஸ்லாமிய அறிஞர்களின் சர்வதேச ஒன்றியத்தின் தலைவராக இருந்து அன்னார் ஆற்றிய பங்களிப்பும் போற்றுதலுக்குரிய தாகும்.


இஸ்லாமிய சட்டம்,தஃவா, சமுகக்களம், இஸ்லாமிய கலைகள், வரலாறு,படைப்பிலக்கியம், ஆன்மீகம்  என அனைத்துத் தளங்களிலும் மிகுந்த விளை திறனுடன் இயங்கிய இமாம் அவர்கள், இந்த ஒவ்வொரு பரிமாணத்திலும் எழுதியுள்ள நூல்கள் அவரது ஆழமான ஆய்வுகளின் பிரத்தியட்ஷமான புலப்பாடுகளாகவே உள்ளன. குர்ஆன்,சுன்னாஹ், முன்னைய இஸ்லாமிய அறிஞர்கள்,சட்டவியலாளர்கள், என ஆதாரங்களை அடுக்கும் அவரது எழுத்துப்பாங்கு அவருக்கேயுரிய தனித்தன்மையாகும். வரைவிலக்கணத்திலிருந்து தொடங்கி வரலாற்று வழியாக நகர்ந்து ஷரீஆவின் வரையறைகளை முன்னிறுத்தி தர்க்க ரீதியாக முடிவுறுத்தும் அந்த எழுத்து மிகுந்த சுவாரஸ்யம் கொண்டது. வாசிக்கும்போதுதான் அந்த இன்பத்தை அனுபவிக்கலாம். ஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி (றஹ்) அவர்களது எழுத்துக்கும் கர்ழாவி அவர்களது எழுத்துக்கும் இடையிலான விலகல் புள்ளிகளில் இதுவும் ஒன்று.


வேதனையாய் வேதனையாய்

வெளியாகிறது!

இவ்வேதம்

கிழக்கிலும் மேற்கிலும்

ஒளிபாய்ச்சும் சூரியனாய்

வழிகாட்டுகிறது! ஆனால்

முஸ்லிம்களோ குருடர்கள் போல்

குமைந்து நிற்கிறார்கள்.


நபஹாத் வலபஹாத் என்ற அவரது தொகுதியில் உள்ள இந்தக்கவிதை அடிகள் முஸ்லிம்களுக்கும் குர்ஆனுக்குமிடையே இன்று நிலவும் பலவீனமான உறவைப் படம்பிடித்துக் காட்டுகிறது. இந்த மார்க்கம் வாழ நான் சிரித்துக் கொண்டே மரணிப்பேன் என்ற தலைப்பில் அவர் சூடானில் நடந்த இலக்கியச் சந்திப்பில் பாடிய கவிதையும் மிக அற்புதமானது. 

சமகால முஸ்லிம் உம்மாவின் வீழ்ச்சி நிலை கண்டு அவர் மனம் வெம்பினார்.


சமூக மாற்றம் மற்றும் சீர்திருத்தம் குறித்து மர்ஹூம் முஹம்மத் அல்கஸ்ஸாலி அவர்கள் கொண்டிருந்த அதே கண்ணோட்டத்தையே இமாம் அவர்களும் கொண்டிருந்தார். குற்றுயிராய் வீழ்ந்து கிடக்கும் இஸ்லாமிய சமூகத்தை தூக்கி நிலைநிறுத்தும் முதன்மை ஆயுதம் முஸ்லிம் சமூகம் குறித்த சுயவிமர்சனமே என்பதில் இமாம் அவர்கள் ஆழமாக நம்பிக்கை கொண்டிருநதார். அதன் பிரதிபலிப்பே கோளாறு எங்கே என்ற அவர்களது நூலாகும்.அந்நூலில் சமூகப்பின்னடைவுக்கான மூல காரணங்களை விமர்சனபூர்வமாக அவர் ஆராய்கிறார்.


அவரது வாழ்வும் வகிபங்கும் நம் எல்லோருக்கும் ஒரு முன்மாதிரியான பாடமாகும். தனது இரண்டாவது வயதில் தந்தையையும் பதினான்காவது வயதில் தாயையும் இழந்த ஒருவர், இந்த இமயத்தை எப்படி எட்டினார்? என்பது ஆச்சரியமான கேள்விதான். கிராமப்புறமொன்றில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து, அனாதையாக வளர்ந்து ,வறுமையோடு போராடிப் போராடி, பெரும் புயல் வீசும் தருணங்களில் அலைகள் மீது தாவித் தள்ளாடி வாழ்க்கைக் கடலில் கரை சேர்ந்த அவரது பயணம், எத்துணை மகத்தானது என்பதை எளிதில் ஊகிக்கலாம். விளையும் பயிரை முளையில் தெரியும் என்பதுபோல் அவரது கல்வி ஈடுபாடும் பேரார்வமும் அவரது எதிர்கால இமயத்தின் தீர்க்க தரிசனமாய் தெரிந்தது.


அவர் எதிர்நோக்கிய வறுமை அவரை அவரது கல்விப் பயணத்திலிருந்து

தடுத்து நிறுத்த அவர் அனுமதிக்கவில்லை. தனக்கு முன்னால் குவிந்த அத்தனை வாய்ப்புகளையும் அவர் பயன்படுத்தினார். அல் அஸ்ஹரின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனத்தில் இணைந்து ஆரம்பக்கல்வியை த்தொடர்ந்தார். அடைவுகளில் எப்போதும் முன்னணி மாணவராக திகழ்ந்தார். உயர்தரப் பரீட்சையில் இரண்டாம் இடத்தைப் பிடித்த அவர்கள், அல் அஸ்ஹர் உஸூலுத்தீன் பீடத்தில் இணைந்து 1953 இல் பட்டதாரியாக வெளியேறினார். அவரது வகுப்பில் அப்போது 180 மாணவர்கள் . அவர்தான் முதற்தர சித்தி (First Class)யைப் பெற்றார்.


1957 இல் மொழித்துறை மற்றும் இலக்கியத்திற்கான உயர்கல்வி நிறுவனத்தின் டிப்ளோமா பட்டம் பெற்றார். 1960 இல் உஸூலுத்தீன் பீடத்தில் குர்ஆன் ஹதீஸ் துறைகளில் முதுகலைக்குச் சமாந்திரமான உயர்கல்வித் சான்றிதழ் அவருக்கு வழங்கப்பட்டது. 1973 இல் 'ஸகாத்தும் சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அதன் பங்கும் ' எனும் தலைப்பில் மேற்கொண்ட ஆய்வுக்காக கலாநிதிப்பட்டம் பெற்றார்கள்.


கர்ழாவி இமாம் அவர்களது ஒவ்வொரு துறை சார் பங்களிப்பு குறித்தும் இந்தப்பத்தியில் எழுத எண்ணுகிறேன் இன்ஷா அல்லாஹ்!


தொடரும்

கலாநிதி றவூப் ஸெய்ன்

2022.09.27.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக