செவ்வாய், 26 டிசம்பர், 2023

இளமையில் வறுமையும் உழைப்பில் இறையச்சமும் பேணுதலும்!

நேற்று மாலை எனது உள்நாட்டு தொழில் வங்கி குழும நிர்வாகி இலக்கத்திற்கு ஒரு தம்பி தகவல் அனுப்பி இருந்தார்.

அவர் சாதாரண தரம் படிக்கும் காலம் முதல் எனது முகநூல் நட்பு பட்டியலில் இருந்து பதிவுகளை வாசிப்பவராக இருந்தார், அவ்வப்போது அவரது கல்வி நடவடிக்கைகளுக்கு துஆ செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்வார்.

தற்போது உயர்தரம் செய்து விட்டு குடும்ப நிலை காரணமாக  கொழும்பில் ஒரு ஆடைகள் விற்பனை நிலையத்தில் காசாளராக தொழில் புரிகிறார்.

சேர், நான் தொழில் புரியும் இடத்தில் தொடர்ந்து இசை பாட்டு போடப்படுகிறது, நம்மவர் அதிகம் வருகை தரும் நவநாகரீக ஆடையகமான இதில் அதிகமான ஆடைகள் மார்க்க வரைமுறைகளை மீறிய கவர்ச்சி ஆடைகளாக இருக்கின்றன.

இதில் எனது உழைப்பு ஹலால் ஆகுமா என்று கேட்டிருந்தார், அதற்கு நான் அவருக்கு கீழ்காணும் பதிலை அனுப்பி வைத்தேன்:

"முதலாவது உங்களது இந்த இறையச்சத்திற்கு அல்லாஹ் கூலி தர துஆ கேட்கிறேன்..

நீங்கள் இயன்றவரை மனதில் திக்ரு இஸ்திஃபார் ஸலவாத் சொல்லிக் கொண்டிருங்கள்.

உங்களுக்கு மன ஆறுதல் தரும் மற்றொரு தொழில் கிடைக்க துஆவுடன் முயற்சியும் செய்யுங்கள்..

உங்களது கஷ்யர் தொழிலுக்குரிய சம்பளம் ஹலால் ஆக இருக்கும் இன்ஷா அல்லாஹ்.

அல்லாஹ் உங்கள் வாழ்விலும் வாழ்வாதாரத்திலும் பரக்கத் செய்வானாக."

உண்மையில் வறுமையிலும் ஹலால் ஹராம் பேணி உழைக்க வேண்டும் என்றும் ஆடை அணிகளில் கூட இஸ்லாமிய வரைமுறைகள் தானும் பிறரும் பேண வேண்டும், பாவகாரியங்களை 
தூண்டும் விடயங்களை தவிர்ந்து கொள்ள வேண்டும் என பேணுதல் ஆக இருக்க முயலும் அந்த சகோதரனது இறையுணர்வு தக்வா எனது மனதை தொட்டது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் துபாயில் வசிக்கும் ஒரு இளம் கோடீஸ்வரர் தனது ஸகாத் சதகாக்களை முறையாக கொடுப்பதில் அவ்வப்போது ஆலோசனைகள் கேட்பவர், கிழக்கு கரையோரப் பிரதேசத்தில் முதலீட்டிற்காக ஒரு இடத்தை வாங்குவது தொடர்பாக பேசிய பொழுது  " சில மார்க்க விடயங்கள் காரணமாக" நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் முதலிட தான் தயங்குவதாக கூறினார்.

மறுமைக்கான இந்த -தற்காலிக வாழ்வெனும்- சோதனைக் களத்தில் எமது வாழ்வாதாரம் ஆகுமான வழிவகைகளில் திரட்டப்பட வேண்டும், எமது உணவு உடை உறையுள் ஹராமான உழைப்பினால் சேகரிக்கப் பட்டவை ஆயின் எமது வணக்க வழிபாடுகள், துஆக்கள் அங்கீகரிக்கப் படுவதில்லை, வாழ்வில் விருத்தி நிம்மதி சந்தோஷம் நிலைப்பதில்லை என்ற எண்ணம் ஈமானிய நெஞ்சங்களில் இயல்பாக இருப்பது தான் இஸ்லாமிய வாழ்வு நெறியின் சிறப்பம்சம்.

அன்றாடம் ஹலாலான வாழ்வாதாரம் தேடும் விசுவாசிகளால் தாம் தொழில் செய்யும் இடங்களில் மஸ்ஜிதுகள் தொழுகைக்காக நிறைந்து விடுவதை நாம் காண்கிறோம், இறையச்சமும் பயபக்தியும், இக்லாஸும் தக்வாவும் துறவவறத்திலும் சந்நியாசத்திலும் அல்ல வாழ்க்கைப் போராட்டத்தில் பிரதிபலிப்பதையே இஸ்லாமிய வாழ்வு நெறி போதிக்கிறது.

உருட்டு புரட்டு திருட்டு இலஞ்சம் ஊழல் மோசடி எனவும் போதைப் பொருள் விற்பனை கடத்தல் வியாபாரங்கள் என ஹராமான வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு இலட்சங்கள் கோடிகள் என செல்வங்கள் திரட்டும் பலர் ஹஜ் உம்ரா என்றும் கொடையாளர்கள் என்றும் மக்கள் பிரதிநிதிகள் என்றும் வளம் வருவதனை காண்கிறோம்!

இன்று நாட்டு மக்களைச் சுரண்டி, வாழ்க்கைச் செலாவணியை அதிகரிக்கச் செய்து, அத்தியாவசிய உணவு மருந்து  பொருட்களுக்கான தட்டுப் பாட்டை  ஏற்படுத்தி, போதைப் பொருட்களால் நாட்டை குட்டிச் சுவராக்கி  பொருளாதாரத்தை நாசமாக்கி  மக்களது கண்ணீரிலும் இரத்தத்திலும் உயிர் மூச்சிலும்  பரம்பரைகளுக்கும் சொத்துகளை குவிக்கும், சுகபோகங்களை அனுபவிக்கும் அரசியல் வியாபாரிகள், வர்த்தக சமூகம், அரச நிர்வாகம், பாதாள உலகம் என பக்காத் திருடர்கள் கோலோச்சும் யுகத்தில் நாம் நெருப்பு கங்கை உள்ளங் கையில்  தாங்கியிருப்பது போல் ஈமானை காத்து இறையுணர்வோடு வாழ வேண்டி இருக்கிறது.

மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்
27.12.2023 || SHARE

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக