வெள்ளி, 6 மே, 2016

துருக்கிய அரசாங்கத்தினதும் தலைமைத்துவத்திலிருந்து விலகுவதாக துருக்கியப் பிரதமர் தாவூத் ஒக்லூ

அர்துகான் ஒர அரசியல் ராஜதந்திரியை இழக்கிறார். கட்சியினதும் துருக்கிய அரசாங்கத்தினதும் தலைமைத்துவத்திலிருந்து விலகுவதாக துருக்கியப் பிரதமர் தாவூத் ஒக்லூ விடுத்துள்ள அறிவிப்பு அரசியல் களத்தில் ஒரு கொந்தளிப்பை
உண்டாக்கிவிட்டிருக்கிறது. அரசியல் ராஜதந்திரியான தாவூத் ஒக்லூவுக்கும் அரசியல் தலைவரான அர்துகானுக்கும் இடையிலான கருத்தொற்றுமையின்மையே இப்பதவி விலகலுக்கு காரணம் எனச் சொல்லப்படுகிறது. இதன் பின்னணி குறித்து பல்வேறு ஊடகங்கள் அலசியுள்ளன. தாவூத் ஒக்லூ மிகக் கஷ்டமான சந்தர்ப்பமொன்றில் கட்சியினதும் அரசாங்கத்தினதும் பொறுப்பை சுமந்து எடுத்த பொறுப்பை சரிவர நிறைவேற்றியிருக்கிறார். நுணுக்கமான அரசியல் சாணக்கியம் கொண்ட இஸ்லாமியவாதியான பேராசிரியர் ஒக்லூவின் இழப்பு ராஜதந்திரியில்லாமல் துருக்கியை கொண்டு செல்ல அர்துகானை தள்ளிவிட்டிருப்பதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். அர்துகான் ஆகர்ஷணமிக்க, தலைசிறந்த அரசியல் தலைவர். தாவூத் ஒக்லூ மாபெரும் மூலோபாய சிந்தனையார். துருக்கியினதும் முழு இஸ்லாமிய உம்மத்தினதும் நலனுக்காக இருவரும் இணைந்து பயணிக்க வேண்டும் என ஆசிக்கிறேன் என பிரபல சிந்தனையாளர் முஹம்மத் முஃக்தார் ஷன்கீதி தெரிவித்துள்ளார். பேராசிரியர் தாவூத் ஒக்லூ தான் பதவி விலகுவது குறித்து அறிவிக்கும் மாநாட்டில் பணிவோடும் உயர்ந்த பண்பாட்டுடனும் பேசினார். அறபு நாட்டு அரசியல் வாதிகள் மட்டுமல்ல எல்லா அரசியல் வாதிகளும் ஒக்லூவிடம் கால்மடித்து கற்க வேண்டும். பண்பாட்டின் சிகரம் பேராசிரியர், அரசியல் ஞானி தாவூத் ஒக்லூ ஆற்றியிய உரையின் சுருக்கம் இதோ. #- எப்போதும் எனது இலக்காக இருந்தது என்னை அல்லாஹ் பொருந்திக் கொள்ள வேண்டும் என்பதே. அடுத்து நாடும் மக்களும் எனது இலக்காக இருந்தனர். #- ஏ கே பி கட்சியை காப்பதும் அதன் பெறுமானங்கள், கொள்கைகளை காப்பதும் எனது இலக்காக எப்போதும் இருந்திருக்கிறது. #- தேர்தல் பிரச்சாரத்தின் போது துருக்கிய மக்களுக்கு நாம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கட்சி என்ற வகையில் தொடர்ந்தும் உழைப்போம். #- ஏ கே பி கட்சியின் அரசாங்கம் தொடர்ந்தும் பலமுடன் இருக்கும். #- இவ்வளவு சாதனைகளின் பின்னரும் இன்று எடுத்த தீர்மானம் குறித்து கேள்வி கேட்பவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது, வாழ்க்கையில் அதிக அனுபவங்களை நாம் படித்திருக்கிறோம் என்பதைத்தான். #- நாட்டுக்கோ கட்சிக்கோ தீங்கு செய்ய யாருக்கும் நான் அனுமதிக்க மாட்டேன். #- பாதையில் பயணிப்பதற்கு முன்னர் பயணத்தோழர்கள் முக்கியம். என்னுடன் பயணித்த தோழர்களில் நான் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். ஏ கே பி கட்சியின் தலைமைப்பதவியை இழப்பது பயணத் தோழரை இழப்பதை விட மிக இலகுவானது. ஜனாதிபதி அர்துகானுடனான எனது உறவில் சந்தேகம் கொள்வதை நான் ஏற்றுக் கொள்ளவே மாட்டேன். #- நாட்டு நலன் அல்லது கட்சி நலனைவிட எனது நலனை ஒருபோதும் நான் மேலாகக் கருத மாட்டேன். #- ஏ கே பி கட்சியின் பெறுமானங்களில் கொள்கைகளில் கைவைக்க யாருக்கும் நான் அனுமதிக்க மாட்டேன். #- ஏ.கே.பி கட்சிக்கு அச்சுறுத்தல் விடுப்பவர்களுக்கு எதிராக நான் முன்னணியில் இருப்பேன். #- ஏ.கே.பி கட்சியில் ஒரு தொண்டராக பணிபுரிவதிலிருந்து ஒரு போதும் பின்வாங்க மாட்டேன். #- எந்தவகையிலும் பிளவுபட வேண்டாம் என ஏ.கே.பி கட்சித் தோழர்களிடம் வேண்டிக் கொள்கிறேன். #- உங்களின் எந்த ஒருவரின் உரிமையிலாவது நான் தவறுவிட்டிருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுமாறு அனைவரிடமும் மன்னிப்புக் கேட்கிறேன். #- இப்புவியியல் பிரதேசத்தில் வாழுகின்ற அனைத்து மக்களுக்களினதும் உரிமைகளை நாம் பேணிப் பாதுகாப்போம். #- கட்சியில் இளைஞர் சபைக்கு அதிக கவனத்தை கொடுப்பது எமது கடமையாகும். அவர்கள்தான் கட்சியினதும் நாட்டினதும் எதிர்காலம். #- “அல்லாஹ்வைத் தவிர வேறு எவராலும் மிகைக்க முடியாது” என முன்பு கூறினேன். “அல்லாஹ் மீது நம்பிக்கை (தவக்குள்) வைக்கிறேன் என இன்று சொல்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக