வியாழன், 2 ஆகஸ்ட், 2018

ஊரோடு கலந்து வாழ்ந்த சமூக செயற்பாட்டாளர்

மர்ஹும் முஹம்மது முஸ்தபா ஹாஜியார்:

உலகில் எத்தனையோ மனிதன் பிறக்கிறான், இறக்கிறான் இதுவொரு  சுழலும் செயற்பாடாக உள்ளது. பிறக்கும் எல்லா மனிதர்களும் சம்பவமாகி விடுவதில்லை. அவற்றை எல்லாம் கடந்து மர்ஹும் முஹம்மது முஸ்தபா ஹாஜியார் இறக்காமம், அமீரலிபுரம் ஆகிய ஊர்களின் சரித்திரமாகிறார்.

மனிதன் ஒரு சமூக விலங்கு என்றான் ரூசோ. மனிதனை அரசியல் விலங்கு
(homo politicus) என்றான் அரிஸ்டாட்டில். இறக்காமம் மண்ணில் வாழ்ந்த பல சிறந்த ஆளுமைகளுள் சமூக சேவகர் அல்- ஹாஜ் முஹம்மது முஸ்தபா அவர்கள் ஒரு தனியான இடம் பிடிக்கிறார் என்பதை யாரும் மறுக்க முடியாது.

77 காலப் பகுதியிலே சம்மாந்துறையின் மஜீது எம்பி அவர்கள் இறக்காமத்திலே கொடி கட்டிப் பறந்து அரசியல் செய்யப் பக்க பலமாக இருந்தவர் தான் பெரியவர் மர்ஹும் முஸ்தபா ஹாஜியார். அரசியல் அவருக்கு என்றும் இனிப்பாகவே இருந்திருக்கிறது. தான் மரணிக்கும் வரைக்கும் மர்ஹும் மஜீத் எம். பி. யைப் போல UNP கட்சியோடே இணைந்து செயற்படலானார். இவரோடு சேர்ந்து இவரின் சகோதரரான அல் ஹாஜ் மர்ஹும் அப்துஸ் ஸலாம் அவர்களும் ஊரில் பல சேவைகளையும் செய்தார்கள். அரசியலிலே இவர் செய்த சேவைகள் பல இன்றும் இந்த ஊர் மக்களால் பேசப்படுகின்றன.

* அமீரலிபுர வீட்டுத் திட்டம்,

* பெருவெளிக் கண்ட காணிப் பிரச்சினை,

* தபாலகம்,

* இறக்காமம் கமநல சேவை நிலையம்,

* இறக்காமம் மின்சாரத் திட்டம்

* இறக்காமம் கிராமோதய சபை

எனப் பல பாரிய அபிவிருத்திக் கெல்லாம் மர்ஹும் மஜீட் எம்பியுடன் சேர்ந்து வித்திட்டவரே மர்ஹும் முஹம்மது முஸ்தபா எனும் இவ்வாளுமை.

ஆரம்ப காலம் முதல் பொது வாழ்க்கையில் தன்னை இணைத்துக் கொண்ட இவர் மரணிக்கும் வரை சமூக சேவகராகவே வாழ்ந்தார். மக்களோடு என்றும் இரண்டறக் கலந்தே வாழ்ந்தார். மஸ்ஜித்தோடு தொடர்பான சேவைகள், சனசமூக நிலையம், கிராம அபிவிருத்திச் செயற்பாடுகள், சமுர்த்தி வறுமை ஒழிப்புத் திட்டத்தோடு தொடர்பான எல்லாச் செயற்பாடுகளிலுமே இவர் தீவிரமாக ஈடுபடக் கூடியவர். தனது அந்திம காலத்தில் கூட DCC கூட்டங்களிலே தனது கருத்தை வெளிப்படையாக அதிகாரிகள் மத்தியிலே பேசி மக்களுக்காக வாதிட்டு வென்றெடுப்பதில் இவர் வல்லவராகவே இருந்தார்.

தனது தனிப்பட்ட வாழ்விலும், சமூக வாழ்க்கையிலும் சிறப்பாகவே வாழ்ந்து வந்த இவர் எப்போதுமே இறை திருப்தியைப் பெறும் எண்ணத்தோடே வாழ்ந்தார். பொருள் சாராத ஒரு பண்பாட்டைக் கொண்டே (non- material culture) வாழலானார். தனது பிள்ளைகளைக் கூட ஆத்மீகம் சார் கல்வியூட்டவே முற்படலானார்.

அரசியலிலே நீண்டகாலம் முதல் பல புறக்கணிப்புக்களுக்கு உட்பட்டு வரும் இந்த ஊரிலே மக்களுக்கான பல திட்டங்களைத் தீட்டுவதிலே இவரின் பங்கு அளப் பெரியதே. இன்று தனியான முஸ்லிம் பெயர்களைத் தாங்கிய கட்சிகள் அந்த தலைவர்களின் முன்னேற்றம் பற்றி யோசித்துக் கொள்கிறது. சமூகம் என்று ஒன்றுமே இல்லை. பள்ளிகளும், பண்பாடுகளும் பல கோடி நஷ்டம் அடைந்து வருகின்றன. இதை அப்போதே உணர்ந்து தேசிய அரசியல் கட்சியிலே இணைந்து எமது சமூகத்துக்குப் பல உரிமைரீதியான சேவைகளைச் செய்வதையே முஸ்தபா ஹாஜியார் நம்பினார்.

இறக்காமம் மண் பல துறைகளிலும் ஓங்க வேண்டும் என்பதில் இவர் அவரளவில்  இயன்ற வரை முயற்சி எடுத்தார். எந்தப் பொது வேலை என்றாலும் தனது சொந்த வேலை போல் அதைச் செய்ய உதவும் உள்ளமே இவரின் தனித் தன்மை. இவரில்லாத பொது வேலையே இருக்க மாட்டாது. ஊருக்கு உழைத்தவர் இன்று அள்ளாஹ்வின் சந்நிதானத்தை நாடிச் சென்று விட்டார். மண்ணறையிலே அவர் சந்தோசமாக வாழ வல்ல நாயன் துணை நிற்பானாக.

இவரை நினைவு கூர்வதில் என்றும் பெருமை கொள்ளலாம்.

ஏ.எல். நௌபீர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக