வியாழன், 30 ஆகஸ்ட், 2018

இளைஞர்களை புரிந்து கொள்ளுங்கள்…..

 இக்ராம் நசீர்
 நாம் பள்ளிவாயிலுக்கு வந்த போது எம்மை அங்கு வரக்கூடாது என்றீர்கள்… நாம் ஸப்புகளில் நின்றால் எமது கால்களுக்கிடையே ஷைத்தான் புகுந்து வருவதாகக் கதை சொன்னீர்கள்… நாம் சுவனத்து றோஜாக்கள் என்பது அப்போது உங்களுக்குத் தெரியவில்லை…

அல்லாஹ்வின் கலாமை ஓதக் கற்பதற்காக பள்ளிக் கூடம் வந்த போது பெண்ணம் பெரிய தடியுடன், உச்சஸ்தாயி குரலுடன் எமக்கு முன்னால் தோன்றி எம்மை அச்சுருத்தினீர்கள்… அல்லாஹ் என்றாலே இப்படித்தானோ என்று நாம் மிரண்டு போனோம்… அல்லாஹ்வின் கலாம் எமக்கு வெறுப்புக்குரியதானது… பள்ளிவாயில் அச்சம் தரும் இடமாக மாறியது… ஆனால், அல்லாஹ்வின் கலாம் அன்பின் ஊற்று என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை…

 நாம் பாடசாலைக்கு வந்தோம் அங்கும் ஆடிப்பாடித் திரியக் கூடாது… இருந்த இடம் விட்டு எழுந்திரக் கூடாது… வெளிவாசலுக்கு செல்ல வேண்டிய தேவை வந்தாலும் அவற்றை அடக்கிக் கொள்ள வேண்டும் என எமது சிறகுகளை உடைத்தீர்கள்… நாம் சுவனத்தின் சிட்டுக்கள் என்பது உங்களது கண்களுக்குத் தெரியவில்லை….

இளமைப் பருவத்தை எட்டிப் பார்த்த போது எம்மை பித்னாக் காரர்கள் என்றீர்கள்… எதற்கும் உருப்படியற்றவர்கள் என்றீர்கள்… தீமைகளின் உறைவிடம் என்றீர்கள்… எம்மை எல்லாவற்றிலும் சந்தேகமாகவே பார்த்தீர்கள்… நாம்தான் இந்த சமூகத்தின் முதுகெலும்புகள் என்பதனை நீங்கள் மறந்துவிட்டீர்கள்…

நாம் சமூக விவகாரங்களில் அக்கறை செலுத்தத் துவங்கினோம்… நாலு விடயத்தையும் தேடிப் படித்தோம்… சமூக அசைவை புரிந்து கொள்ள முற்பட்டோம்… அங்கு நடக்கின்ற அநீதிகெளுக்கெதிராக குரல் கொடுத்தோம்… சமூகத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றோம்… ஆனால், நீங்கள் எம்மை பண்பாடற்றவர்கள் என்றீர்கள்…  அறிஞர்களை மதிக்கத் தெரியாவதவர்கள் என்றீர்கள்… மூத்தோரை வசை பாடுவதாகச் சொன்னீர்கள்… நாம் எதற்காகவும் எந்த ஊதியமும் பெற்றுக் கொள்ளாது நீதியை யாசிக்கும் தூய ஆன்மாக்கள் என்பதனை மறந்துவிட்டீர்கள்… அநீதியைக் கண்டால், பிறரை சுரண்டி வாழ்வதைக் கண்டால் எம்மால் பொறுத்துக் கொள்ள முடியாது என்பதனை மறந்து விட்டீர்கள்… போலிகள், ஏமாற்று வித்தைகள் எமக்கு அலர்ஜியானது என்பதனை மறந்துவிட்டீர்கள்…

   …..இவ்வளவையும் செய்யும் நீங்கள்தான் சிறுவர்களின் மீது இரக்கம் காட்டுவது குறித்துப் பேசுகிறீர்கள்… இளைஞர்கள் சமூகத்தின் முதுகெலும்பு என்பது குறித்துப் பேசுகிறீர்கள்… இளைஞர்கள் தான் நாளைய, சிலர் இன்றைய தலைவர்கள் என்கிறீர்கள்… ஆனால், எம்மோடு நீங்கள் உறவாடுவதைப் பார்த்தால் அப்படி விளங்கவில்லை… அந்த உரைகள் உங்களுக்கு தரப்படுகின்ற கூலிகளுக்காகப் பேசப்படுவனவா ? அல்லது எங்கள் மீதான அக்கறையில் நீங்கள் அவற்றைப் பேசுகிறீர்களா?... எங்கள் மீதும் நாம் பிறந்து வளர்ந்த சமூகத்தின் மீதும் எமது தேசத்தின் மீதும் உண்மையான அக்கறை உங்களுக்கு இருக்கின்றதென்றால் எம்மை புரிந்து கொள்ளுங்கள்…

….. நாம் இலட்சங்கள் பெறுமதியான வாகனங்களிற்கு சொந்தக் காரர்களல்லர்… நாம் பயணிப்பதோ இந்த நாட்டின் சாதாரண மக்கள் பயணிக்கும் பஸ்களிலும் புகைவண்டிகளிலுமே… சமூகத்திற்கான எமது செயற்பாடுகளுக்கு யாரும் எமக்கு கூலிகள் தருவதில்லை… இந்த சமூகத்திற்காக நாம் செலவு செய்யும் நிமிடங்கள் ரூபாய்களில் வருமானம் வைக்கப்படுவதில்லை… எமக்கென்று நலன் சார்ந்த சார்பியங்கள் இல்லை… இதுவெல்லாம் உங்களுக்கு இருக்கின்றதா இல்லையா என்று நாம் இங்கு விவாதிக்கவில்லை… இதுவெல்லாம் இல்லாமலேயே இந்த சமூகத்தின் மீது அக்கறை கொண்டு உழைக்கும் எங்களை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனத்தான் கேட்கிறோம்….

…. சமூகத்தை வீணாகக் குழப்பக் கூடாது என்பதற்காக நாம் கொதித்தெழும்போது… சமூகத்தை தமது சுயநலன்களுக்காக குழப்புபவர்களையும் எம்மையும் ஒரே தராசில் வைத்து நிறுத்தி கருத்தெழுதாதீர்கள்…எமக்கு சமூகத்தைப் பிரிக்கும் அரசியல் எல்லாம் தெரியாது... அதனைச் செய்பவர்களைக் காணும் போதுதான் எமக்கு மௌனிக்க முடியவில்லை... அநீதிகள் நடப்பதை பச்சை பச்சையாகக் காண்கிறோம்… சொந்த ஈகோவுக்காக பிறர் பலியிடப்படுவதை, ஏதுமறியாதவர்கள் பாவிக்கப்படுவதை பச்சை பச்சையாகக் காண்கிறோம்… சட்டத்தின் ஓட்டைகளை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு சின்ன வீடு விளையாடுவதை பச்சை பச்சையாகக் காண்கிறோம்… மார்க்கத்தின் பெயரால், அல்லாஹ்வின் பெயரால், தக்வாவின் பெயரால் சமூகம் பிழையாக வழிநடாத்தப் படுவதை பச்சை பச்சையாகக் காண்கிறோம்…. மார்க்கத்தின் பெயரால் அதிகாரத்துக்கு சோரம் போவதைக் காண்கிறோம்…. எமது சிறார்களின் இளமை துஷ்டிக்கப்படுவதைக் காண்கிறோம்…எமது இளைஞர்கள் சமூக ஒதுக்கம் செய்யப்படுவதைக் காண்கிறோம்… எமது யுவதிகள் மார்க்கத்தின் பெயரால் வஞ்சிக்கப்படுவதை எமது கண்களால் காண்கிறோம்…

இவற்றை எமது கண்களுக்கு பொய் என்று சொல்லிக் கொடுக்கவா சொல்கிறீர்கள்? எமது மனச்சாட்சியை எங்கு அடகு வைக்கச் சொல்கிறீர்கள்… இவற்றை நாம் யாருடையதும் கருத்துக்களை முடக்குவதற்காகச் சொல்லவில்லை… நாம் காணுகின்ற உண்மைகள்… நாம் காணுகின்ற யதார்த்தங்கள்… இவற்றுக்கு என்ன தீர்வு ? தலைவர்கள் என்பவர்களே சொல்லுங்கள்…. நாம் என்ன செய்ய வேண்டும்…? இது எமக்கு முன்னால் உள்ள உலகம்… இந்த உலகத்தை நாம் இப்படியே பார்த்திருக்க விரும்பவில்லை… இதற்கு ஒரு தீர்வு கேட்கிறோம்… அந்தத் தீர்வு எமது கரங்களாலும் எழுதப்படுவதற்கான காலம் வெகு தூரத்தில் இல்லை… எம்மையும்  புரிந்து கொள்ளுங்கள்…
**************************************
 இப்படிக்கு இளைஞர்கள்
**************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக