வெள்ளி, 14 டிசம்பர், 2018

துரோகத்தால் எழுதப்பட்ட வரலாறு

நளீம் ஹாஜியார் மீதான குற்றச்சாட்டு.


1974ம் ஆண்டு சிரிமாவோ பண்டாரநாயக அரசு அந்நியச் செலாவனி நெருக்கடிக்கு உடபட்ட போது மர்ஹூம் நளீம் ஹாஜியார் அவர்கள் அன்றை அரசுக்கு பதினைந்து இலட்சம் ரூபா (15,000,00/=) அந்நியச் செலவானி உதவியளித்து நாட்டின் அந்நிய செலவாணி நெருக்கடி பிரச்சனை தீர்வுக்கு பங்களித்தார்கள். இதுவே வரலாற்றில் பதியப்பட்ட சிறந்த தேசப்பற்றுக்கான எடுத்துக்காட்டாக அமைந்தது.



இந்த நிகழ்வு நடந்து நான்கு மாதங்களே ஆகியிருந்த நேரம் நளீம் ஹாஜியார் அவர்கள் தனது ஹம்மாந்தோட்டை வீட்டில் அரசின் அடுத்த ஆண்டிற்கான பட்ஜட் பற்றி அறிவதற்காக வானொலிப் பெட்டியை இயக்கினார். அப்போது அங்கே செய்திகளுக்கு முன்னரான முக்கிய அறிவித்தலாக:
 "பேருவலை பிரபல மாணிக்க வியாபாரி நளீம் ஹாஜியார் அவர்கள்  அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்  ஆகவே அவரது கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்படுவதோடு
கடந்த பத்து வருடங்களுக்குறிய வியாபாரக் கணக்குகளை சமர்ப்பிக்கும் படியும் வேண்டப்படுகின்றார். அத்தோடு விசாரனைக்காக அவரை கைது செய்யும்படி நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. என்ற அறிவித்தல் வாசிக்கப்பட்டது.

 இவ்வறிவிப்பால் நேர்மைமிக்க நளீம் ஹஜியாரும் அவரது சகாக்களும் அதிர்சசியுற்றனர். அங்கிருந்தால் CIDயினரால் எந்நேரமும் கைதுசெய்யப்படலாம் என்றுணர்ந்த அவர்கள் உடனடியாக ஹம்மாந்தோட்டை வீட்டிலிருந்து வெள்ளவத்தையிலுள்ள தனது நன்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்று அங்கு இரண்டு நாட்கள் தலைமறைவாக தங்கியிருந்தார்கள். அந்த இரண்டு நாட்களிலும் CIDயினரும் பொலிஸாரும் நளீம் ஹாஜியார் அவர்களைத் தேடி நளீம் ஹாஜியார் அவர்களின் பேருவலை இல்லம்  மற்றும் ஹம்மாந்தோட்டை இல்லம் பள்ளிவாசல்கள், உறவினர் வீடுகள் என தமது தேடல்களை மேற்கொண்டிருந்தனர்.

இதனை கேள்வியுற்ற நளீம் ஹாஜியார் அவர்கள்  எந்த மோசடிகளும் செய்யாது நேர்மையாக வியாபாரம் செய்யும் நான் ஏன் தலைமறைவாக இருக்க வேண்டும் என்ற வினாவோடு CID தலைமையகம் நோக்கிப் பயணித்தார்கள். அங்கு நாலாம் மாடியை அடைந்து அங்கிருந்த அதிகாரிகளிடம்
 “நான் தான் நளீம் ஹாஜியார் பொலிஸாரால் நான் தேடப்படுவதாக அறிந்தேன். அதனால் சரணடைய வந்துள்ளேன் “ என்றார்கள்.

அப்போது அங்கே வந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் கதிர்காமர் அவர்கள் நளீம் ஹாஜியார் அவர்களை விசாரனைக்காக அழைத்தார்கள். அவர்களது விசாரனை இரவு வரை நீடித்தது.அன்றைய விசாரணைகளின் பின்னர் இன்னும் ஓரிரு நாட்கள் மேலதிக விசாரனைக்காக அங்கு தங்கவேண்டும் எனவும் அதற்காக தனக்கு தேவையான படுக்கை மற்றும் இதர பொருட்களை வீட்டிலிருந்து  பெற்றுக்கொள்ளும்படியும் பனிக்கப்பட்டார். மீண்டும் அடுத்த நாள் விசாரனையின் பின்னர் அன்னிய செலாவணி மோசடியாளர்கள் தடுத்துவைக்கப்படும் பஜ்ஜட் வீதி தடுப்புக்காவல் நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு ஏழு அடி நீளமும் ஐந்தடி அகலமும் உடைய ஒரு சிற்றறையில் தடுத்துவைக்கப்படடார். அங்கிருந்து ஒவ்வொரு நாளும் காலையில் விசாரணைக்காக நாலாம் மாடிக்கு அழைத்து செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டார் .இவ்வாறு நளீம் ஹாஜியார் அவர்கள் தடுத்துவைக்கப்பட்ட செய்தி நாடு பூராகவும் காட்டுத்தீ போல்  பரவியது. பேருவலை மற்றும் அன்னாரை அறிந்த மற்ற ஊர்மக்களும் இச்செய்தியினால் பெரும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்தனர்.

 நாடெங்கிலும் முஸ்லிம்கள் நளீம் ஹாஜியார் அவர்களது விடுதலைக்காக பிரார்த்தனை, நோன்பு நோற்றல் மற்றும் இதர காரியங்களிலும் ஈடுபட்டனர். அன்றைய எதிர்கடசித் தலைவர் திரு.ஜே.ஆர் .ஜயவர்தனா அவர்கள் பாரளுமன்றில் நளீம் ஹஜியார் அவர்களை கொலை குற்றவாளிக்கு வழங்கப்படும் சலுகைகள் கூட வழங்கப்படாததை சுட்டிக்காட்டியதோடு அவரது சட்டத்தரணிகள் அவரைச் சந்திக்க வாய்ப்பளிக்கவேண்டும் என்றும் குரலெலுப்பினார். இது இவ்வாறு இருக்க நாடுபூரவும் நளீம் ஹாஜியாரின் விடுதலைக்கான போராட்டம் வலுப்பெற்றது.

இதன் விளைவாக அரசாங்கம் நளீம் ஹாஜியார் மீதான பாதுகாப்பை உறுதிப்படுத்தியதோடு விசாரனைகளைத் துரிதப்படுத்தியது. தடுப்புக்காவலின் நாற்பத்தேழாவது நாள் விசாரணைக்காக பஜ்ஜட் ரோட்டிலிந்து கொண்டுசெல்லப்பட்ட நளீம் ஹாஜியார் அவர்கள் எவ்வித மோசடிகளும் செய்யவில்லை என அறிவித்து 23ம் திகதி டிசம்பர் மாதம் 1974ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.

 விடுதலையின் பின்னர் வாழ்கையின் மீது வெறுப்புற்றவராக இனி எந்த சமூகசேவைகளிலும் ஈடுபடமாட்டேன் என எண்ணம் கொண்டவர்களாக தனது பிறந்த மண்ணை நோக்கிப் பயணித்தார். அங்கு சீனன் கோட்டைப் பெரிய பள்ளிவாசலிலே நளீம் ஹாஜியார் அவர்களின் வருகையை எதிர்பாரத்தவர்களாக ஊர்மக்கள் ஆண்கள் பெண்கள் பிள்ளைகள் முதியவர்கள் என பெரும்கூட்டம் திரண்டிருந்தனர். ஹாஜியார் அவர்கள் வந்திறங்கி அவர்களுடன் உரையாடிபோது அரசின் இப்பிழையான செயலுக்கெதிராகவும் அவரது விடுதலைக்காகவும்  அவ்வூர் மக்களும் ஏனைய ஊர்மக்களும் மேற்கொண்ட பிராரத்தனைகள், நோன்புகள், நடத்திய போராட்டங்கள் பற்றி அறிந்து கொண்டார்கள்.

 அப்போது அவரது உள்ளம் அடைந்திருந்த சஞ்சலம் நீங்கி  தன் சமூகத்தின் வளர்ச்சிக்காக கல்வி, சமூக சேவைகளை மேற்கொள்வதாக உறுதி பூண்டார்கள். அதன் பின் அவரால் உருவாக்கப்பட்டதே ஜமியா நளீமிய்யா கலாபீடமாகும்.அல்லாஹ் அன்னாரையும் அன்னாரது சேவைகளை அங்கீகரிப்பானாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக