வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023

அல்குர்ஆனை ஆழ்ந்து சிந்தித்தல்

 ஷெய்க் முஹம்மத் அல்-கஸ்ஸாலி (றஹ்)

தமிழில்: ஏ.டபிள்யூ.எம். பாஸிர் 


அல்குர்ஆனை பிரக்ஞையின்றி ஓதுதல் முஸ்லிம்களை பீடித்திருக்கின்ற ஒரு நாட்பட்ட நோயாகும். இதனால் இறைவஹியுடனான அவர்களி தொடர்பு மலடாகிப் போயுள்ளது. அல்குர்ஆனின் வசனங்களை ஓதல், கேட்டலுடன் அவர்கள் போதுமாக்கிக் கொண்டுள்ளனர். இவற்றினால் அவர்களது சிந்தனையில் நேர்வழியின் ஒளிக்கீற்றுக்கள் இலேசாக தென்படலாம். ஆனால் அதன் முழு ஒளி உள்ளத்தில் படர முன்னரே அது மிக விரைவாக மறைந்து போய்விடும்.

சிந்தனை, ஆராய்ச்சி நீக்கம் செய்யப்பட்ட மறைவான இரகசியமொன்று குர்ஆனின் எழுத்துக்களை ஓதுவதில் மறைந்திருப்பதாக பொதுமக்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.  


மரணித்தவர்களுக்காக அல்லது மரணத்தறுவாயில் உள்ளவர்களுக்காக பரவலாக ஓதப்படும் சூறாவின் வசனம் எனது கவனத்தை ஈர்த்தது. 


' அது நல்லுபதேசமும் தெளிவான குர்ஆனுமே தவிர வேறில்லை. இது உயிரோடிப்பவர்களை எச்சரிக்கை செய்கிறது. நிராகரிப்பவர்களுக்குரிய தண்டனையை உறுதிப்படுத்துகிறது.' (யாஸீன்: 69:70)


அதேபோல, தன்னைச் சார்ந்திருப்பதை கௌரவமாகக் கருதும் அடியார்களை, அவர்களின் பல உயர் குணங்களை குறிப்பிட்டு விட்டு அல்லாஹ் இவ்வாறு வர்ணிக்கிறான்.


' தங்களது இரட்சகனின் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் செவிடர்களையும் குருடர்களையும் போல அதன் மீது விழமாட்டார்கள்.' (அல்-புர்கான் : 73)

விளக்கமின்றிய கேட்டலும் சிந்திப்பின்றிய பார்வையும் மனித ஆற்றல்களை அழித்துவிடும் நோய்களாகும். அது மனிதனை உயிரற்ற ஜடமாக்கி விடுகிறது. ஜடங்களால் மனித உலகத்தில் எந்தவொன்றையும் செய்ய முடியாது.


பல குர்ஆன் வசனங்களில் வரும் 'திலாவத்' என்ற சொல்லை ஆழ்ந்து நோக்கினால் இறுதித் தூதை எடுத்துச் சொல்லுதல், அதன் பொது மைல்கற்களை தெளிவுபடுத்துதல், விவகாரங்கள், இலக்குகளுக்கான சுருக்கமான காட்சியை வழங்குதல் என்ற கருத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். இதனை எமது காலத்தில் செயல்பாட்டுக் கையேடு (Operation Manual) எனச் சொல்லலாம். கற்றல்இ ஆராய்தல்இ  கற்பித்தல் என்பவையெல்லாம் அதற்குப் பிறகுதான். அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்.


' நபியே நாம் உம்மை இவ்வாறே ஒரு சமூகத்தாரிடம் அனுப்பி வைத்தோம். இவர்களுக்கு முன்னரும் பல கூட்டத்தினர் நிச்சயமாக சென்றிருக்கிறார்கள். நாம் உம்மீது எதை வஹியாக அறிவித்தோமோ அதை இவர்களுக்கு ஒதிக்காண்பிப்பதற்காக உம்மை அனுப்பினோம். (அர்-ரஅது: 30)


'இந்த ஊரை கண்ணியப்படுத்தியுள்ள இறைவனை வணங்குமாறு நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். எல்லா விடயங்களும் அவனுக்கே உரியன. அன்றியும் அவனுக்கே முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும்படியும் நாhன் ஏவப்பட்டுள்ளேன். இன்னும் குர்ஆனை ஓதவும் நான் ஏவப்பட்டுள்ளேன்.' (அந்-நம்லு: 91)


திலாவத் என்பது அல்லாஹ் தனது வேதத்தில் வழங்கியுள்ள சத்தியத்தையும் ஒளியையும் வாசிப்பதற்கான திறப்பு என்பதை அதிகமான அல்-குர்ஆன் வசனங்கள் சொல்கின்றன. அப்படியிருக்க எப்படி அது உணர்வின்றிப்பாடும் துதிப்பாடல்களாக மாறிப்போனது?!


குர்ஆனின் சொற்கள் புனிதத் தன்மையைக் கொண்டிருப்பது உண்மையே. அல்லாஹூ தஆலா முதல் ஸுஹூபுகளுக்கு நிகழ்ந்தவைக்கு மாற்றமாக அல்-குர்ஆனை பாதுகாப்பானதாக்க விரும்பியதுதான் அதற்குக் காரணம். 


கருத்துக்களை அறிவிப்பதனூடாக, அதன் மொழிபெயர்ப்புக்களை நகர்த்துவதனூடாக அல்குர்ஆனின் சொற்களை குறைத்து மதிப்பிடுவதானது அல்குர்ஆனின் உண்மையை அமைப்பு ரீதியாகவும் கருப்பொருள் ரீதியாகவும் இல்லாமலாக்கிவிடுகிறது. இதனால்தான் குர்ஆனின் சொற்களின் மீது கடுமையான கவனம் செலுத்தப்பட்டிருந்தது. அதனை திரும்ப திரும்ப ஒதுவதை கூலிதரும் வணக்கமாகவும் ஆக்கப்பட்டது. 


சொகுசான பெட்டியொன்றில் விலையுயர்ந்த மாணிக்கக்கற்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அந்தப் பெட்டி விடயத்தில் கூடுதலான கவனம் செலுத்தப்படுகிறது. அதனுள்ளேயிருக்கும் ஒரு மாணிக்கம் திருட்டுப்போய்விடும் போது அந்தப் பெட்டிக்கு என்ன பெறுமதி கிடைக்கப்போகிறது!


எழுத்துக்களை அழகாக உச்சரிக்கத் தெரிந்து கொண்டு அதன் கருத்துக்களை மறந்தோமானால் அந்த அல்குர்ஆனினால் என்ன பயனை அடையப்போகிறோம்?


நாங்கள் குர்ஆனை ஓதிக் கொண்டிருக்கையில் ஷைத்தான் எமது அறிவை திருடிவிட்டானா என யோசிக்க வேண்டியிருக்கிறது?


'மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆழ்ந்து சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் இதயங்கள் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டதா? (முஹம்மத்: 24)


'குர்ஆன் பற்றிய சில பார்வைகள்' என்ற நூலின் முன்னுரையிலிருந்து (01)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக