ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2023

கடன் தீர்த்து... சிறு கதை


“இது....! ஊட்டுக்கு ப்ரிஜ் இல்லாமல் பெரிய கரச்சல்...”

“ஓ! நானும் வாங்கத்தான் நெனச்சிக் கொண்டிருக்கிற...”

“என்னத்துக்கு புதிசா வாங்கோணும்? ஒங்கட ஊட்டில இருக்கிறது நீங்க வாங்கினதாமே! அதக் கொண்டு வந்தாச் சரி!”

“அது ஊட்டுக்கு வாங்கினது... அத எப்பிடி நான் கேக்கிற...?”

“நல்ல கத. நீங்க வாங்கினதக் கேக்க என்னத்துக்கு யோசிக்கோணும்? இப்ப எங்களுக்கு வாங்க வசதியில்ல, நான் வாங்கினதக் கொண்டு போறேன் என்டு சொல்ல வேண்டியதுதானே!”

“..........”


                                          


“இது..! இப்பதான் எனக்குத் தெரியும். நீங்க சொல்லவும் இல்ல...”

“என்னத்த..?”

“மாமிட ரூம்ல இருக்கிற பெரிய அலுமாரி, அது நீங்க வாங்கினதாமே!”

“இல்ல... யாரு சொன்ன..?”

“எனக்கு மறைக்க வேணாம்! ஒங்கட மதினிதான் சொன்ன.."

“உம்மா வாப்பாக்கு மகன் எத வாங்கிக் குடுத்தாத்தான் என்ன! அது மறைக்க வேண்டிய விசயமா? நான் அலுமாரி வாங்கல்ல.. உம்மாக்கு நான் செலவுக்கு அனுப்பினதில மிச்சம் புடிச்சி உம்மா வாங்கி இரிக்கிறா"

“அப்ப அவ்வளவு சல்லி நீங்க அனுப்பிருக்கிற.. சரி.. சரி.. இப்ப புள்ளைகளிட உடுப்பு வைக்க அலுமாரி இல்ல என்டு சொல்லி அந்த அலுமாரியக் கொண்டு வாங்கோ!'

“ஹனீமா, நீங்க என்ன சொல்ற..?"

“ஒங்கட சல்லிக்கு வாங்கினத ஒங்கட ஊட்டுக்குக் கொண்டு வரச் சொல்ற.. இது குத்தமா?"

“.............”


“இது...! ஊட்டுல ஒங்கட தாத்தா பாவிக்கிற மெஷின்....அதுவும் நீங்க ஸவுதியில இருந்து கொண்டு வந்ததாமே! ஏன் இதொன்டையும் எனக்கிட்ட சொல்றல்ல..?”

“ஹனீமா! பென்சிலும் கொப்பியும் எடுத்திட்டு வாங்கோ! கலியாணம் முடிக்க முந்தி ஊட்டுக்குக் கொண்டுவந்த டொபி, சொக்லட்டில இருந்து எல்லாம் லிஸ்ட் போட்டுத் தாரன்.”

“சரி, சரி, அதுக்கு என்னத்துக்கு அவ்வளவு கோவம் எடுக்கிற? கிழிஞ்ச உடுப்பத் தச்சவும் வழியில்லாம நான் படுகிறபாடு! இன்டைக்கே அந்த மெஷின எடுத்துக் கொண்டு வாங்கோ! தாத்தாக்கு மெஷின் வேணுமென்டா மச்சான் வாங்கிக் குடுப்பார்தானே!”

“........................................."


“இது...! ஒங்கட ஊட்டுல பாவிக்கிற அந்தப் பெரிய க்ரைன்டர் ஸெட்... அது எங்கட வெடிங்குக் கெடச்சதாம். ஓங்கட மாமி அது அவட கிப்ட் என்டு சொன்ன.. பாருங்கோ, சொல்லாமப் பேசாம வச்சிக் கொண்டு பாவிக்கிற மாதிரி! சீ... எங்கட உம்மவென்டா ஒரு நாளும் இப்பிடி நாய் வேல செய்யிறல்ல...”

“ஹனீமா...!”

“என்னத்துக்கு இப்பிடிக் கத்துற..?”

“பேசுறத அளந்து பேசுங்கோ! உம்மா எங்கட சாமான் ஒன்டையும் களவான்ட இல்ல. ரெண்டு மூனு க்ரைன்டர் கெடச்சதால, மாமி தந்தத வச்சிக் கொள்ளச் சொல்லி நான்தான் உம்மாக்குச் சொன்ன......”

“நல்லா இரிக்கி. கெடச்சதுல நல்ல ஸெட் அதுதான். அதத் தூக்கிக் குடுத்துட்டு வந்தீக்கிற... நாளைக்கே அதக் கேட்டெடுத்துக் கொண்டு வாங்கோ!"


“...........................”


“இது....! ஒங்கட ஊட்டுல புதுசா கட்டின பகுதியெல்லாத்துக்கும் நீங்களாமே செலவழிச்சது..... யாரப்பே! நாங்க சொந்த ஊடில்லாம கூலி ஊட்டுல இரிக்கிற நீங்க கட்டின ஊட்ட வச்சிட்டா? இப்பவே போங்கோ! ஊட்டுல அரவாசிய ஒங்கட பேருக்கு எழுதித் தரச் சொல்லுங்கோ!” 


“இது..! நான் எத்தின நாளா எத்தின விஷயம் சொல்லி வார... நீங்க ஒன்டையாவது செய்யிற மாதிரி வெளங்கவே இல்ல....... நீங்க செய்யப் போறா? இல்லையா?”

“செய்யிற ஹனீமா ஒன்டையும் உடாம எல்லாத்தையும் செய்யிறன்........’

“சா....... ஏன்ட தங்கம்”

“அதுக்கு முந்தி சில வேலைகள் செய்ய வேணும்...”

“என்னத்த...?”

“ஏன்ட உம்மா என்ன வயித்தல சொமந்து கொண்டு கஷ்டப்பட்டாவே அதுக்கான கூலியக் குடுக்கவே ஏன்ட ஆயுள் போதாது. அதையும் குடுத்திட்டு, உம்மா தந்த பாலுக்கான கூலி, வாப்பா படிபிச்சி ஆளாக்க செலவு செஞ்ச காசு, பட்ட கஷ்டத்துக்கான கூலி, ஏன்ட மேல அவங்க ரெண்டு பேரும் காட்டின அளவில்லாத அன்பு, அக்கற எல்லாத்துக்குமான கூலி எல்லாத்தையும் குடுத்திட்டு, நீங்க சொன்னதுகள எடுத்திட்டு வாரன்!”


-ஷாறா-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக