செவ்வாய், 29 ஆகஸ்ட், 2023

நன்மையை ஏவுதல் தீமையை தடுத்தல் இரண்டும் சிறந்த உம்மத்தின் சமாந்தரமான பண்புகளாகும்!

 


சத்தியம், அறம், தர்மம், உண்மை, நீதி, நீதி, நேர்மை, அன்பு, கருணை, அறிவு, ஒழுக்கம், பண்பாடு, சமாதானம், சமத்துவம், சகவாழ்வு, நல்லாட்சி, மனிதாபிமானம் என நல்ல வாழ்வியல் ஓங்க உழைப்பது, ஏவுதல், பிரச்சாரம் செய்தல் சிறந்த உம்மத்தின் அடிப்படைப் பண்பாகும்.


அதே போன்று அவற்றிற்கு நேர்மாறான அசத்தியம், பொய், அநீதி, அக்கிரமம், அராஜகம், களவு, ஊழல், மோசடி, அறியாமை, அடாவடித்தனம், சமூக, பொருளாதார, கலை, கலாசார, ஒழுக்க, பண்பாட்டு, சுகாதார, சுற்றுச் சூழல் சீர்கேடுகள், மது, போதை வஸ்துகள், இனமத வெறி, வன்முறை, தீவிரவாதம் போன்ற தீயவற்றை தடுப்பதும், அவற்றிற்காக எழுந்து நிற்பதும், குரல் கொடுப்பதும் மனிதர்களுக்காக அனுப்பப்பட்ட சிறந்த உம்மத்தின் பண்பு ஆகும்.


எமது வணக்க வழிபாடுகளும் ஆன்மீக பண்பாட்டு அடித்தளங்களும்  அத்தகைய அறநெறிகளின் பால் தான் எம்மை இட்டுச் செல்கின்றன, தனிப்பட்ட குடும்ப ஆன்மீக வாழ்வு ஒன்றாகவும் பொது வாழ்வு, சமூக தேசிய வாழ்வு வேறொன்றாகவும் இருக்க முடியாது.


ஆக, மன்னர் ருஸ்துமிற்கு முன்னால் ரிப்ஈ பின் ஆமிர் என்ற நபித் தோழர் நிறுத்தப்பட்ட பொழுது நீங்கள் இங்கு படையெடுப்பதன் நோக்கம் என்ன என்று கேட்கப்பட்ட பொழுது "மனிதர்களின் அடக்குமுறைகள், அடிமைத் தலைகளில் இருந்தும், அவர்கள் உருவாக்கிக் கொண்ட கொள்கை கோட்பாட்டு அநீதி அக்கிரமங்களில் இருந்தும் மக்களை விடுவித்து இஸ்லாம் சொல்லித் தரும் நீதி சமத்துவத்தின் பாலும், உலக வாழ்வின் நெருக்கடிகளில் இருந்து வளமான வாழ்வியல் பக்கமும் அவர்களை வழிநடத்துவது எமது பணி, இறைவனது மார்க்கத்தை நிலைபெறச் செய்வதே எமது பணி" என்று கூறினார்கள்.


உண்மையில் எல்லாம் வல்ல இறைவன் எல்லா மனிதர்களுக்கும் படைப்பினங்களுக்கும் வாழ்வதற்காக படைத்துள்ள இந்த பூமியில் எல்லை மீறி அடாத்தாக அராஜகம் புரிந்த அக்கிரமக்காரர்கள் சர்வாதிகாரிகளுக்கு எதிராகவே அனைத்து இறைதூதர்களும் போராடி இருக்கின்றார்கள்.


பிர்அவுன், காரூன், ஹாமான், நும்ரூத், அபூ ஜஹ்ல், உத்பா உமையா, ஆது, ஸமூது என   சங்கிலித் தொடரான அசத்தியத்தின் அராஜகத்தின் காவலர்களது அடிமைத்தனத்தில் இருந்து மக்களை விடுவிப்பதே அவர்களது பிரதான பணியாக இருந்தது.


தீமையை கையால் தடுப்பது முடியாவிட்டால், சொல்லால் தடுப்பது கடமையாகிறது, எழுந்து நின்று போராடுவது குரல் கொடுப்பது இரண்டும் முடியாத விட்டால் மனதால் வெறுத்து அசத்தியத்தை விட்டும் அதன் காவலர்களை விட்டும் ஒதுங்கி நிற்பது மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட சிறந்த உம்மத்திற்கு சொல்லித் தரப்பட்ட மாநபி வழியாகும்!


தேசத்தின் நலன்கள், அமைதி, சமாதானம், சமத்துவம், சகவாழ்வு, அடிப்படை சமய கலாசார உரிமைகள், இருப்பு, பாதுகாப்பு, சயாதிபத்தியம், அரசியல் ஸ்திரத்தன்மை, பொருளாதார சபீட்சம், நல்லாட்சி  என்ற அனைவருக்கும் பொதுவான இலக்குகளில் சரியான தரப்புக்களுடன் தோளோடு தோள் நின்று உழைப்பதுவும் அறவழி நடக்கும் சிறந்த உம்மத்தின் பண்பாகும்.


அங்கு சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையில் சமரசம் கிடையாது, சொந்த இலாப நஷ்டங்கள், விருப்பு வெறுப்புகள், நட்புகள், உறவு முறைகள், சொந்த பந்த பாசங்கள் என விட்டுக் கொடுப்புகள் இருக்க முடியாது, இரண்டும் கெட்டான் நயவஞ்சகத் தனங்கள் இருக்க முடியாது!


மக்கள் மன்றில் நீதி கோரப்படும் சந்தர்ப்பங்களில் எல்லாம் சத்தியத்தின் சாட்சியாளர்களாக, உண்மை, நீதி, நேர்மை, அறம், தர்மத்தின் சாட்சியாளர்களாக மனச்சாட்சியின் படி சான்று பகர்வதே விசுவாசிகள் மீதான தார்மீகக் கடமையாகும்.


மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக