செவ்வாய், 3 மே, 2016

இன்று பாராளுமன்றத்தில் கூச்சல்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிலர் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்தீப் சமரசிங்க மீது தாக்குதல் மேற்கொண்டதை அடுத்து அவர், தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவை நடவடிக்கை 5 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று (03) இடம்பெற்ற சபை நடவடிக்கையின்போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பில் எழுந்த வாக்குவாதத்தின்போதே குறித்த சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மஹிந்த ராஜபக்‌ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்ட விடயம் தொடர்பில், ஒத்திவைப்பு வேளை விவாதம்ன ஒன்று அவசியம் என தினேஷ் குணவர்தன தெரிவித்திருந்தார்.
குறித்த விடயம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதிலளித்தார். “மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு பாதுகாப்பு வழங்கப்படும். அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அவர் இல்லை எனில் எம்மால் தேர்தலை வெற்றிபெற்றிருக்க முடியாது” எனத் தெரிவித்தார்.
அதனை அடுத்து சரத் பொன்சேகா உரையாற்றினார். மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சியின்போது, தனக்கு கிடைத்த பாதுகாப்புக் குறித்து தெரிவித்தார்.
இதன்போது, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட ஆரம்பித்தனர்.
இவ்வேளையில் பிரசன்ன ரணதுங்க மற்றும் பாலித தேவரப்பெரும ஆகியோர் ஒருவருக்கொருவர், வாக்குவாதத்தில் ஈடுபட்டவாறு முன்னால் வந்தனர். இதன்போது, அவர்களை தடுப்பதற்காக அவர்களுக்கு நடுவில் சந்தீப் சமரசிங்க வந்தார்.
இதனை அடுத்து, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அவரை தாக்கினார். நிலைமையை கட்டுப்படுத்த முடியாத நிலையில் சபை நடவடிக்கையை 5 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
இதனை அடுத்து, தாக்குதலுக்குள்ளான பாராளுமன்ற உறுப்பினர் சந்தீப் சமரசிங்க, சிகிச்சைக்காக தேசிய வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக