செவ்வாய், 26 டிசம்பர், 2023

இளமையில் வறுமையும் உழைப்பில் இறையச்சமும் பேணுதலும்!

நேற்று மாலை எனது உள்நாட்டு தொழில் வங்கி குழும நிர்வாகி இலக்கத்திற்கு ஒரு தம்பி தகவல் அனுப்பி இருந்தார்.

அவர் சாதாரண தரம் படிக்கும் காலம் முதல் எனது முகநூல் நட்பு பட்டியலில் இருந்து பதிவுகளை வாசிப்பவராக இருந்தார், அவ்வப்போது அவரது கல்வி நடவடிக்கைகளுக்கு துஆ செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்வார்.

தற்போது உயர்தரம் செய்து விட்டு குடும்ப நிலை காரணமாக  கொழும்பில் ஒரு ஆடைகள் விற்பனை நிலையத்தில் காசாளராக தொழில் புரிகிறார்.

சேர், நான் தொழில் புரியும் இடத்தில் தொடர்ந்து இசை பாட்டு போடப்படுகிறது, நம்மவர் அதிகம் வருகை தரும் நவநாகரீக ஆடையகமான இதில் அதிகமான ஆடைகள் மார்க்க வரைமுறைகளை மீறிய கவர்ச்சி ஆடைகளாக இருக்கின்றன.

இதில் எனது உழைப்பு ஹலால் ஆகுமா என்று கேட்டிருந்தார், அதற்கு நான் அவருக்கு கீழ்காணும் பதிலை அனுப்பி வைத்தேன்:

"முதலாவது உங்களது இந்த இறையச்சத்திற்கு அல்லாஹ் கூலி தர துஆ கேட்கிறேன்..

நீங்கள் இயன்றவரை மனதில் திக்ரு இஸ்திஃபார் ஸலவாத் சொல்லிக் கொண்டிருங்கள்.

உங்களுக்கு மன ஆறுதல் தரும் மற்றொரு தொழில் கிடைக்க துஆவுடன் முயற்சியும் செய்யுங்கள்..

உங்களது கஷ்யர் தொழிலுக்குரிய சம்பளம் ஹலால் ஆக இருக்கும் இன்ஷா அல்லாஹ்.

அல்லாஹ் உங்கள் வாழ்விலும் வாழ்வாதாரத்திலும் பரக்கத் செய்வானாக."

உண்மையில் வறுமையிலும் ஹலால் ஹராம் பேணி உழைக்க வேண்டும் என்றும் ஆடை அணிகளில் கூட இஸ்லாமிய வரைமுறைகள் தானும் பிறரும் பேண வேண்டும், பாவகாரியங்களை 
தூண்டும் விடயங்களை தவிர்ந்து கொள்ள வேண்டும் என பேணுதல் ஆக இருக்க முயலும் அந்த சகோதரனது இறையுணர்வு தக்வா எனது மனதை தொட்டது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் துபாயில் வசிக்கும் ஒரு இளம் கோடீஸ்வரர் தனது ஸகாத் சதகாக்களை முறையாக கொடுப்பதில் அவ்வப்போது ஆலோசனைகள் கேட்பவர், கிழக்கு கரையோரப் பிரதேசத்தில் முதலீட்டிற்காக ஒரு இடத்தை வாங்குவது தொடர்பாக பேசிய பொழுது  " சில மார்க்க விடயங்கள் காரணமாக" நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் முதலிட தான் தயங்குவதாக கூறினார்.

மறுமைக்கான இந்த -தற்காலிக வாழ்வெனும்- சோதனைக் களத்தில் எமது வாழ்வாதாரம் ஆகுமான வழிவகைகளில் திரட்டப்பட வேண்டும், எமது உணவு உடை உறையுள் ஹராமான உழைப்பினால் சேகரிக்கப் பட்டவை ஆயின் எமது வணக்க வழிபாடுகள், துஆக்கள் அங்கீகரிக்கப் படுவதில்லை, வாழ்வில் விருத்தி நிம்மதி சந்தோஷம் நிலைப்பதில்லை என்ற எண்ணம் ஈமானிய நெஞ்சங்களில் இயல்பாக இருப்பது தான் இஸ்லாமிய வாழ்வு நெறியின் சிறப்பம்சம்.

அன்றாடம் ஹலாலான வாழ்வாதாரம் தேடும் விசுவாசிகளால் தாம் தொழில் செய்யும் இடங்களில் மஸ்ஜிதுகள் தொழுகைக்காக நிறைந்து விடுவதை நாம் காண்கிறோம், இறையச்சமும் பயபக்தியும், இக்லாஸும் தக்வாவும் துறவவறத்திலும் சந்நியாசத்திலும் அல்ல வாழ்க்கைப் போராட்டத்தில் பிரதிபலிப்பதையே இஸ்லாமிய வாழ்வு நெறி போதிக்கிறது.

உருட்டு புரட்டு திருட்டு இலஞ்சம் ஊழல் மோசடி எனவும் போதைப் பொருள் விற்பனை கடத்தல் வியாபாரங்கள் என ஹராமான வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு இலட்சங்கள் கோடிகள் என செல்வங்கள் திரட்டும் பலர் ஹஜ் உம்ரா என்றும் கொடையாளர்கள் என்றும் மக்கள் பிரதிநிதிகள் என்றும் வளம் வருவதனை காண்கிறோம்!

இன்று நாட்டு மக்களைச் சுரண்டி, வாழ்க்கைச் செலாவணியை அதிகரிக்கச் செய்து, அத்தியாவசிய உணவு மருந்து  பொருட்களுக்கான தட்டுப் பாட்டை  ஏற்படுத்தி, போதைப் பொருட்களால் நாட்டை குட்டிச் சுவராக்கி  பொருளாதாரத்தை நாசமாக்கி  மக்களது கண்ணீரிலும் இரத்தத்திலும் உயிர் மூச்சிலும்  பரம்பரைகளுக்கும் சொத்துகளை குவிக்கும், சுகபோகங்களை அனுபவிக்கும் அரசியல் வியாபாரிகள், வர்த்தக சமூகம், அரச நிர்வாகம், பாதாள உலகம் என பக்காத் திருடர்கள் கோலோச்சும் யுகத்தில் நாம் நெருப்பு கங்கை உள்ளங் கையில்  தாங்கியிருப்பது போல் ஈமானை காத்து இறையுணர்வோடு வாழ வேண்டி இருக்கிறது.

மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்
27.12.2023 || SHARE

ஸஊதி அரேபியாவுக்கு நிதியுதவி வழங்கிய இலங்கை முஸ்லிம்கள்.

சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் பழைய குறிப்புப் புத்தகம் ஒன்று என் கைக்கு கிடைத்தது. அது எப்படி என்னிடம் வந்தது என்பது நினைவில் இல்லை. 1945ம் ஆண்டு காலப் பகுதியில்  மைப் பேனாவால் எழுதப்பட்டிருந்த அந்த மொனிட்டர் அப்பியாசக் கொப்பியில் 'மக்கா - மதீனா பஞ்ச நிவாரண நிதி சேகரிப்பு' எனத் தலைப்பிடப்பட்டு இருந்தது. அடுத்து வந்த பக்கங்களில் அந்த நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்தவர்களின் பெயர் விபரம் எழுதப்பட்டிருந்து. 50 சதம், ஒரு ரூபாய்,  இரண்டு ரூபாய் என ஒவ்வொருவரும் அன்பளிப்புச் செய்த தொகை குறிப்பிடப்பட்டிருந்தது நினைவில் இருக்கிறது.

நான் கவனமாக எடுத்து வைத்திருந்த அந்த குறிப்புப் புத்தகத்தை இப்போது தேடிக் கொள்ள முடியவில்லை. அது பழைய பேப்பர் காரனிடம் போய்ச் சேர்ந்து விட்டதோ தெரியாது.

அதற்குப் பல வருடங்களின் பின்னர் தான் கீழே காட்டப்பட்டுள்ள 30/04/1945 திகதியிடப்பட்ட  பத்திரத்தை வாசிக்கக் கிடைத்தது. அதிலிருந்து இந்த விடயம் தொடர்பான முழு விபரத்தையும் அறிந்து கொள்ள முடிந்தது.

1939 முதல் 1945 வரை இரண்டாம் உலகப்போர் நடந்தது. இக்காலப் பகுதியில் ஹஜ்ஜுக்கு வெளிநாட்டவர்கள் செல்வது தடைப்பட்டது. ஹஜ்  யாத்திரிகர்கள் மூலம்  கிடைக்கும் வருமானத்தில் தங்கியிருந்த மக்காவாசிகளும் மதீனாவாசிகளும் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானார்கள். அப்பகுதிகளில் பஞ்சம் நிலவத் தொடங்கியது.

இந்த நிலையில்தான் கொழும்பில் வாழ்ந்த முஸ்லிம்கள் 'மக்கா - மதீனா பஞ்ச நிவாரணக் கமிட்டி' என்ற பெயரில் அமைப்பொன்றை ஏற்படுத்தி நிவாரண நிதி சேகரிக்கத் தொடங்கினர். இந்த குழு டாக்டர் எம். ஸீ. எம் கலீல் (இலங்கை முஸ்லிம் லீக் தலைவர்) அவர்களின் தலைமையில் செயல்பட்டிருக்கிறது. அக்காலத்தில் அவர் State Council என்னும் ராஜாங்க சபையின் உறுப்பினர். இக்குழுவின் செயலாளராக பீ.எஸ். அப்துல் காதிர் என்பவர் இருந்துள்ளார். கொழும்பு உட்பட 86 ஊர்களில் இந்த நிதி சேகரிப்பு நடந்திருக்கிறது.

மொத்தம் 71,832 ரூபா 81 சதம் சேகரிக்கப்பட்டிருக்கிறது. முதல் கட்டமாக 50,000/- ரூபாவும்  அதனை அடுத்து 20,000/- ரூபாவும் என மொத்தம் 70,000/- ரூபாய் கொழும்பில் இருந்த Eastern Bank ஊடாக  Telegraphic Transfer மூலம் ஸஊதி மன்னர் அப்துல் அஸீஸ் இப்னு சுவூத் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு நன்றி தெரிவித்து பதில் தந்தியும் மன்னரிடமிருந்து வந்துள்ளது.

குறிப்பிட்ட வருடத்தில் ஒரு அமெரிக்க டொலரின் பெறுமதி  3/- ரூபாவாக இருந்திருக்கிறது. அதன்படி பார்த்தால் சுமார் 23,300 டொலருக்கு சமமான பணத்தை இலங்கை முஸ்லிம்கள் ஸவூதி அரேபியாவுக்கு நன்கொடையாக அனுப்பி வைத்துள்ளனர்.  

இந்தப் பத்திரத்தில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது:

3-4-45
சென்ற 4, 5 வருடங்களாக யுத்தத்தினால் ஜனங்கள் ஹஜ்ஜுக்கு  போதிய அளவில் போகவில்லை. இதனால் ஹிஜாஸில் குறிப்பாய் மக்கா மதீனா நகர சுற்றுப்புறங்களில் வசிக்கும் ஹஜ் கால வரும்படியை எதிர்பார்த்து வாழக்கூடிய அரபிகளுக்கு கஷ்டமேற்பட்டு பஞ்ச நிலமை ஏற்பட்டிருப்பதாக நாமும் அறிந்து நமது முயற்சியின் பேரில் கொழும்பில் "மக்கா - மதீனா பஞ்ச நிவாரண கமிட்டி" என்ற பேரால் ஒரு கமிட்டி ஏற்படுத்தி பண வசூல் செய்தோம். மொத்தம் ரூ 71,832/81 வசூலானது. கொழும்புவுட்பட 86 ஊர்களில் நிதி சேகரித்து அனுப்பியிருந்தனர். மாட்சிமிக்க சுல்தான் அப்துல் அஸீஸ்  இப்னு சுவூது மன்னர் அவர்கட்கு முதன்முறையாக  ரூ 50,000/- மும் இரண்டாம் முறையாக ரூ 20,000/-மும், ஆக 70,000/- கொழும்பு ஈஸ்டர்ன் பேங்க் மூலமாக T. T. அனுப்பிக் கொடுத்தோம். ஒப்புக்கொண்டு நன்றி பாராட்டி தந்தி சொல்லி இருந்தார்கள்.
கமிட்டிக்குத் தலைவர் ஜனாப் Dr M. C. M. கலீல் M. S. C.
" "  காரியதரிசி ஜனாப் P. S. அப்துல் காதிர்
ஆபீஸ் 163, 2ம் குறுக்குத் தெரு,
 கொழும்பு.
-------------
குறிப்பு: இதற்கு முன்னர் பலர் இது பற்றி எழுதியிருக்கக்கூடும். புதிய தலைமுறை அறிந்து கொள்ளட்டும் என்று நானும் எழுதினேன்.
- Hafiz Issadeen -23/12/2023

வெள்ளி, 1 டிசம்பர், 2023

காகித்திலிருந்து ஒன்லை அரட்டைக்கு மாறிய மனிதம்.

அன்று ஒரு காலம் தூரத்து நண்பனுக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பினால் அந்த கடிதம் நன்பனுக்கு போய் சேர்ந்துவிட்டதா ? இல்லையா ? என்பதுகூட தெரியாது, நண்பனின் பதில் கடிதம் வரும் வரை தபாற்காரனை பார்த்துக்கொண்டிருந்த காலம்.


இன்று ஏதோ ஒரு சமூக ஊடகத்தில் நன்பனை ஒன்லைன்னில் பார்த்தாலே போதும் 

Hi Da Machan என்று ( தங்ளிஸில் )தொடரும் அரட்டை,  நாம் அனுப்பிய செய்தியை நண்பர் பார்த்துவிட்டார் என்பதைக்கூட உறுதி செய்ய முடியும். அடுத்த செய்தி எதிர்பார்த்து காத்திருக்கும் எமக்குத்தான் டைப் செய்துகொண்டிருக்கின்றார் என்பதையும் உறுதி செய்ய முடியும்.  



தொழிநுட்பத்தின் காலடியில் கீழ் கிடக்கும் மனிதம்.


- சலீம் பைரூஸ்

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2023

நன்மையை ஏவுதல் தீமையை தடுத்தல் இரண்டும் சிறந்த உம்மத்தின் சமாந்தரமான பண்புகளாகும்!

 


சத்தியம், அறம், தர்மம், உண்மை, நீதி, நீதி, நேர்மை, அன்பு, கருணை, அறிவு, ஒழுக்கம், பண்பாடு, சமாதானம், சமத்துவம், சகவாழ்வு, நல்லாட்சி, மனிதாபிமானம் என நல்ல வாழ்வியல் ஓங்க உழைப்பது, ஏவுதல், பிரச்சாரம் செய்தல் சிறந்த உம்மத்தின் அடிப்படைப் பண்பாகும்.


அதே போன்று அவற்றிற்கு நேர்மாறான அசத்தியம், பொய், அநீதி, அக்கிரமம், அராஜகம், களவு, ஊழல், மோசடி, அறியாமை, அடாவடித்தனம், சமூக, பொருளாதார, கலை, கலாசார, ஒழுக்க, பண்பாட்டு, சுகாதார, சுற்றுச் சூழல் சீர்கேடுகள், மது, போதை வஸ்துகள், இனமத வெறி, வன்முறை, தீவிரவாதம் போன்ற தீயவற்றை தடுப்பதும், அவற்றிற்காக எழுந்து நிற்பதும், குரல் கொடுப்பதும் மனிதர்களுக்காக அனுப்பப்பட்ட சிறந்த உம்மத்தின் பண்பு ஆகும்.


எமது வணக்க வழிபாடுகளும் ஆன்மீக பண்பாட்டு அடித்தளங்களும்  அத்தகைய அறநெறிகளின் பால் தான் எம்மை இட்டுச் செல்கின்றன, தனிப்பட்ட குடும்ப ஆன்மீக வாழ்வு ஒன்றாகவும் பொது வாழ்வு, சமூக தேசிய வாழ்வு வேறொன்றாகவும் இருக்க முடியாது.


ஆக, மன்னர் ருஸ்துமிற்கு முன்னால் ரிப்ஈ பின் ஆமிர் என்ற நபித் தோழர் நிறுத்தப்பட்ட பொழுது நீங்கள் இங்கு படையெடுப்பதன் நோக்கம் என்ன என்று கேட்கப்பட்ட பொழுது "மனிதர்களின் அடக்குமுறைகள், அடிமைத் தலைகளில் இருந்தும், அவர்கள் உருவாக்கிக் கொண்ட கொள்கை கோட்பாட்டு அநீதி அக்கிரமங்களில் இருந்தும் மக்களை விடுவித்து இஸ்லாம் சொல்லித் தரும் நீதி சமத்துவத்தின் பாலும், உலக வாழ்வின் நெருக்கடிகளில் இருந்து வளமான வாழ்வியல் பக்கமும் அவர்களை வழிநடத்துவது எமது பணி, இறைவனது மார்க்கத்தை நிலைபெறச் செய்வதே எமது பணி" என்று கூறினார்கள்.


உண்மையில் எல்லாம் வல்ல இறைவன் எல்லா மனிதர்களுக்கும் படைப்பினங்களுக்கும் வாழ்வதற்காக படைத்துள்ள இந்த பூமியில் எல்லை மீறி அடாத்தாக அராஜகம் புரிந்த அக்கிரமக்காரர்கள் சர்வாதிகாரிகளுக்கு எதிராகவே அனைத்து இறைதூதர்களும் போராடி இருக்கின்றார்கள்.


பிர்அவுன், காரூன், ஹாமான், நும்ரூத், அபூ ஜஹ்ல், உத்பா உமையா, ஆது, ஸமூது என   சங்கிலித் தொடரான அசத்தியத்தின் அராஜகத்தின் காவலர்களது அடிமைத்தனத்தில் இருந்து மக்களை விடுவிப்பதே அவர்களது பிரதான பணியாக இருந்தது.


தீமையை கையால் தடுப்பது முடியாவிட்டால், சொல்லால் தடுப்பது கடமையாகிறது, எழுந்து நின்று போராடுவது குரல் கொடுப்பது இரண்டும் முடியாத விட்டால் மனதால் வெறுத்து அசத்தியத்தை விட்டும் அதன் காவலர்களை விட்டும் ஒதுங்கி நிற்பது மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட சிறந்த உம்மத்திற்கு சொல்லித் தரப்பட்ட மாநபி வழியாகும்!


தேசத்தின் நலன்கள், அமைதி, சமாதானம், சமத்துவம், சகவாழ்வு, அடிப்படை சமய கலாசார உரிமைகள், இருப்பு, பாதுகாப்பு, சயாதிபத்தியம், அரசியல் ஸ்திரத்தன்மை, பொருளாதார சபீட்சம், நல்லாட்சி  என்ற அனைவருக்கும் பொதுவான இலக்குகளில் சரியான தரப்புக்களுடன் தோளோடு தோள் நின்று உழைப்பதுவும் அறவழி நடக்கும் சிறந்த உம்மத்தின் பண்பாகும்.


அங்கு சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையில் சமரசம் கிடையாது, சொந்த இலாப நஷ்டங்கள், விருப்பு வெறுப்புகள், நட்புகள், உறவு முறைகள், சொந்த பந்த பாசங்கள் என விட்டுக் கொடுப்புகள் இருக்க முடியாது, இரண்டும் கெட்டான் நயவஞ்சகத் தனங்கள் இருக்க முடியாது!


மக்கள் மன்றில் நீதி கோரப்படும் சந்தர்ப்பங்களில் எல்லாம் சத்தியத்தின் சாட்சியாளர்களாக, உண்மை, நீதி, நேர்மை, அறம், தர்மத்தின் சாட்சியாளர்களாக மனச்சாட்சியின் படி சான்று பகர்வதே விசுவாசிகள் மீதான தார்மீகக் கடமையாகும்.


மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2023

கடன் தீர்த்து... சிறு கதை


“இது....! ஊட்டுக்கு ப்ரிஜ் இல்லாமல் பெரிய கரச்சல்...”

“ஓ! நானும் வாங்கத்தான் நெனச்சிக் கொண்டிருக்கிற...”

“என்னத்துக்கு புதிசா வாங்கோணும்? ஒங்கட ஊட்டில இருக்கிறது நீங்க வாங்கினதாமே! அதக் கொண்டு வந்தாச் சரி!”

“அது ஊட்டுக்கு வாங்கினது... அத எப்பிடி நான் கேக்கிற...?”

“நல்ல கத. நீங்க வாங்கினதக் கேக்க என்னத்துக்கு யோசிக்கோணும்? இப்ப எங்களுக்கு வாங்க வசதியில்ல, நான் வாங்கினதக் கொண்டு போறேன் என்டு சொல்ல வேண்டியதுதானே!”

“..........”


                                          


“இது..! இப்பதான் எனக்குத் தெரியும். நீங்க சொல்லவும் இல்ல...”

“என்னத்த..?”

“மாமிட ரூம்ல இருக்கிற பெரிய அலுமாரி, அது நீங்க வாங்கினதாமே!”

“இல்ல... யாரு சொன்ன..?”

“எனக்கு மறைக்க வேணாம்! ஒங்கட மதினிதான் சொன்ன.."

“உம்மா வாப்பாக்கு மகன் எத வாங்கிக் குடுத்தாத்தான் என்ன! அது மறைக்க வேண்டிய விசயமா? நான் அலுமாரி வாங்கல்ல.. உம்மாக்கு நான் செலவுக்கு அனுப்பினதில மிச்சம் புடிச்சி உம்மா வாங்கி இரிக்கிறா"

“அப்ப அவ்வளவு சல்லி நீங்க அனுப்பிருக்கிற.. சரி.. சரி.. இப்ப புள்ளைகளிட உடுப்பு வைக்க அலுமாரி இல்ல என்டு சொல்லி அந்த அலுமாரியக் கொண்டு வாங்கோ!'

“ஹனீமா, நீங்க என்ன சொல்ற..?"

“ஒங்கட சல்லிக்கு வாங்கினத ஒங்கட ஊட்டுக்குக் கொண்டு வரச் சொல்ற.. இது குத்தமா?"

“.............”


“இது...! ஊட்டுல ஒங்கட தாத்தா பாவிக்கிற மெஷின்....அதுவும் நீங்க ஸவுதியில இருந்து கொண்டு வந்ததாமே! ஏன் இதொன்டையும் எனக்கிட்ட சொல்றல்ல..?”

“ஹனீமா! பென்சிலும் கொப்பியும் எடுத்திட்டு வாங்கோ! கலியாணம் முடிக்க முந்தி ஊட்டுக்குக் கொண்டுவந்த டொபி, சொக்லட்டில இருந்து எல்லாம் லிஸ்ட் போட்டுத் தாரன்.”

“சரி, சரி, அதுக்கு என்னத்துக்கு அவ்வளவு கோவம் எடுக்கிற? கிழிஞ்ச உடுப்பத் தச்சவும் வழியில்லாம நான் படுகிறபாடு! இன்டைக்கே அந்த மெஷின எடுத்துக் கொண்டு வாங்கோ! தாத்தாக்கு மெஷின் வேணுமென்டா மச்சான் வாங்கிக் குடுப்பார்தானே!”

“........................................."


“இது...! ஒங்கட ஊட்டுல பாவிக்கிற அந்தப் பெரிய க்ரைன்டர் ஸெட்... அது எங்கட வெடிங்குக் கெடச்சதாம். ஓங்கட மாமி அது அவட கிப்ட் என்டு சொன்ன.. பாருங்கோ, சொல்லாமப் பேசாம வச்சிக் கொண்டு பாவிக்கிற மாதிரி! சீ... எங்கட உம்மவென்டா ஒரு நாளும் இப்பிடி நாய் வேல செய்யிறல்ல...”

“ஹனீமா...!”

“என்னத்துக்கு இப்பிடிக் கத்துற..?”

“பேசுறத அளந்து பேசுங்கோ! உம்மா எங்கட சாமான் ஒன்டையும் களவான்ட இல்ல. ரெண்டு மூனு க்ரைன்டர் கெடச்சதால, மாமி தந்தத வச்சிக் கொள்ளச் சொல்லி நான்தான் உம்மாக்குச் சொன்ன......”

“நல்லா இரிக்கி. கெடச்சதுல நல்ல ஸெட் அதுதான். அதத் தூக்கிக் குடுத்துட்டு வந்தீக்கிற... நாளைக்கே அதக் கேட்டெடுத்துக் கொண்டு வாங்கோ!"


“...........................”


“இது....! ஒங்கட ஊட்டுல புதுசா கட்டின பகுதியெல்லாத்துக்கும் நீங்களாமே செலவழிச்சது..... யாரப்பே! நாங்க சொந்த ஊடில்லாம கூலி ஊட்டுல இரிக்கிற நீங்க கட்டின ஊட்ட வச்சிட்டா? இப்பவே போங்கோ! ஊட்டுல அரவாசிய ஒங்கட பேருக்கு எழுதித் தரச் சொல்லுங்கோ!” 


“இது..! நான் எத்தின நாளா எத்தின விஷயம் சொல்லி வார... நீங்க ஒன்டையாவது செய்யிற மாதிரி வெளங்கவே இல்ல....... நீங்க செய்யப் போறா? இல்லையா?”

“செய்யிற ஹனீமா ஒன்டையும் உடாம எல்லாத்தையும் செய்யிறன்........’

“சா....... ஏன்ட தங்கம்”

“அதுக்கு முந்தி சில வேலைகள் செய்ய வேணும்...”

“என்னத்த...?”

“ஏன்ட உம்மா என்ன வயித்தல சொமந்து கொண்டு கஷ்டப்பட்டாவே அதுக்கான கூலியக் குடுக்கவே ஏன்ட ஆயுள் போதாது. அதையும் குடுத்திட்டு, உம்மா தந்த பாலுக்கான கூலி, வாப்பா படிபிச்சி ஆளாக்க செலவு செஞ்ச காசு, பட்ட கஷ்டத்துக்கான கூலி, ஏன்ட மேல அவங்க ரெண்டு பேரும் காட்டின அளவில்லாத அன்பு, அக்கற எல்லாத்துக்குமான கூலி எல்லாத்தையும் குடுத்திட்டு, நீங்க சொன்னதுகள எடுத்திட்டு வாரன்!”


-ஷாறா-

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023

அல்குர்ஆனை ஆழ்ந்து சிந்தித்தல்

 ஷெய்க் முஹம்மத் அல்-கஸ்ஸாலி (றஹ்)

தமிழில்: ஏ.டபிள்யூ.எம். பாஸிர் 


அல்குர்ஆனை பிரக்ஞையின்றி ஓதுதல் முஸ்லிம்களை பீடித்திருக்கின்ற ஒரு நாட்பட்ட நோயாகும். இதனால் இறைவஹியுடனான அவர்களி தொடர்பு மலடாகிப் போயுள்ளது. அல்குர்ஆனின் வசனங்களை ஓதல், கேட்டலுடன் அவர்கள் போதுமாக்கிக் கொண்டுள்ளனர். இவற்றினால் அவர்களது சிந்தனையில் நேர்வழியின் ஒளிக்கீற்றுக்கள் இலேசாக தென்படலாம். ஆனால் அதன் முழு ஒளி உள்ளத்தில் படர முன்னரே அது மிக விரைவாக மறைந்து போய்விடும்.

சிந்தனை, ஆராய்ச்சி நீக்கம் செய்யப்பட்ட மறைவான இரகசியமொன்று குர்ஆனின் எழுத்துக்களை ஓதுவதில் மறைந்திருப்பதாக பொதுமக்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.  


மரணித்தவர்களுக்காக அல்லது மரணத்தறுவாயில் உள்ளவர்களுக்காக பரவலாக ஓதப்படும் சூறாவின் வசனம் எனது கவனத்தை ஈர்த்தது. 


' அது நல்லுபதேசமும் தெளிவான குர்ஆனுமே தவிர வேறில்லை. இது உயிரோடிப்பவர்களை எச்சரிக்கை செய்கிறது. நிராகரிப்பவர்களுக்குரிய தண்டனையை உறுதிப்படுத்துகிறது.' (யாஸீன்: 69:70)


அதேபோல, தன்னைச் சார்ந்திருப்பதை கௌரவமாகக் கருதும் அடியார்களை, அவர்களின் பல உயர் குணங்களை குறிப்பிட்டு விட்டு அல்லாஹ் இவ்வாறு வர்ணிக்கிறான்.


' தங்களது இரட்சகனின் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் செவிடர்களையும் குருடர்களையும் போல அதன் மீது விழமாட்டார்கள்.' (அல்-புர்கான் : 73)

விளக்கமின்றிய கேட்டலும் சிந்திப்பின்றிய பார்வையும் மனித ஆற்றல்களை அழித்துவிடும் நோய்களாகும். அது மனிதனை உயிரற்ற ஜடமாக்கி விடுகிறது. ஜடங்களால் மனித உலகத்தில் எந்தவொன்றையும் செய்ய முடியாது.


பல குர்ஆன் வசனங்களில் வரும் 'திலாவத்' என்ற சொல்லை ஆழ்ந்து நோக்கினால் இறுதித் தூதை எடுத்துச் சொல்லுதல், அதன் பொது மைல்கற்களை தெளிவுபடுத்துதல், விவகாரங்கள், இலக்குகளுக்கான சுருக்கமான காட்சியை வழங்குதல் என்ற கருத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். இதனை எமது காலத்தில் செயல்பாட்டுக் கையேடு (Operation Manual) எனச் சொல்லலாம். கற்றல்இ ஆராய்தல்இ  கற்பித்தல் என்பவையெல்லாம் அதற்குப் பிறகுதான். அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்.


' நபியே நாம் உம்மை இவ்வாறே ஒரு சமூகத்தாரிடம் அனுப்பி வைத்தோம். இவர்களுக்கு முன்னரும் பல கூட்டத்தினர் நிச்சயமாக சென்றிருக்கிறார்கள். நாம் உம்மீது எதை வஹியாக அறிவித்தோமோ அதை இவர்களுக்கு ஒதிக்காண்பிப்பதற்காக உம்மை அனுப்பினோம். (அர்-ரஅது: 30)


'இந்த ஊரை கண்ணியப்படுத்தியுள்ள இறைவனை வணங்குமாறு நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். எல்லா விடயங்களும் அவனுக்கே உரியன. அன்றியும் அவனுக்கே முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும்படியும் நாhன் ஏவப்பட்டுள்ளேன். இன்னும் குர்ஆனை ஓதவும் நான் ஏவப்பட்டுள்ளேன்.' (அந்-நம்லு: 91)


திலாவத் என்பது அல்லாஹ் தனது வேதத்தில் வழங்கியுள்ள சத்தியத்தையும் ஒளியையும் வாசிப்பதற்கான திறப்பு என்பதை அதிகமான அல்-குர்ஆன் வசனங்கள் சொல்கின்றன. அப்படியிருக்க எப்படி அது உணர்வின்றிப்பாடும் துதிப்பாடல்களாக மாறிப்போனது?!


குர்ஆனின் சொற்கள் புனிதத் தன்மையைக் கொண்டிருப்பது உண்மையே. அல்லாஹூ தஆலா முதல் ஸுஹூபுகளுக்கு நிகழ்ந்தவைக்கு மாற்றமாக அல்-குர்ஆனை பாதுகாப்பானதாக்க விரும்பியதுதான் அதற்குக் காரணம். 


கருத்துக்களை அறிவிப்பதனூடாக, அதன் மொழிபெயர்ப்புக்களை நகர்த்துவதனூடாக அல்குர்ஆனின் சொற்களை குறைத்து மதிப்பிடுவதானது அல்குர்ஆனின் உண்மையை அமைப்பு ரீதியாகவும் கருப்பொருள் ரீதியாகவும் இல்லாமலாக்கிவிடுகிறது. இதனால்தான் குர்ஆனின் சொற்களின் மீது கடுமையான கவனம் செலுத்தப்பட்டிருந்தது. அதனை திரும்ப திரும்ப ஒதுவதை கூலிதரும் வணக்கமாகவும் ஆக்கப்பட்டது. 


சொகுசான பெட்டியொன்றில் விலையுயர்ந்த மாணிக்கக்கற்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அந்தப் பெட்டி விடயத்தில் கூடுதலான கவனம் செலுத்தப்படுகிறது. அதனுள்ளேயிருக்கும் ஒரு மாணிக்கம் திருட்டுப்போய்விடும் போது அந்தப் பெட்டிக்கு என்ன பெறுமதி கிடைக்கப்போகிறது!


எழுத்துக்களை அழகாக உச்சரிக்கத் தெரிந்து கொண்டு அதன் கருத்துக்களை மறந்தோமானால் அந்த அல்குர்ஆனினால் என்ன பயனை அடையப்போகிறோம்?


நாங்கள் குர்ஆனை ஓதிக் கொண்டிருக்கையில் ஷைத்தான் எமது அறிவை திருடிவிட்டானா என யோசிக்க வேண்டியிருக்கிறது?


'மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆழ்ந்து சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் இதயங்கள் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டதா? (முஹம்மத்: 24)


'குர்ஆன் பற்றிய சில பார்வைகள்' என்ற நூலின் முன்னுரையிலிருந்து (01)

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

விளையாட்டுப் போட்டிகளில் ஆடைகள் அவ்ரத் மறைத்திருப்பதனை உறுதி செய்து கொள்வோம்.

முஸ்லிம் பிரதேச விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர், மகளிர் ஆடைகள் அவ்ரத் மறைத்திருப்பதனை உறுதி செய்து கொள்வோம்.

குறிப்பாக இளைஞர் கழகங்கள் அண்மைக் காலமாக கட்டைக் கால் சட்டைகளை Jersey Bottoms அறிமுகம் செய்து வருவதனை அவதானிக்க முடிகிறது!

ஏற்கனவே நீண்ட பொட்டம்ஸ் அணிந்தவர்கள் (3/4) முக்கால் பொட்டம்ஸ் வரை வந்து தற்போது ஜட்டி வரை வந்துள்ளனர், சிலர் ஸ்கினி அணிந்து கொள்கிறார்கள்.

அத்தோடு சுற்றுலாக்கள் என்று வரும் போதும் பலர் ஜங்கி ஜட்டிகளோடு உலாவருவது சர்வ சாதாரணமாக இருக்கிறது.

சில ஆண்கள் தமது பெண்களை, பெண் பிள்ளைகளை முழுமையாக ஹிஜாபில் வைத்துக் தாமும் ஆண் பிள்ளைகளும் ஜங்கி அணிந்து படமும் எடுத்து பெருமையாக சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்கிறார்கள்!

மாவட்ட மாகாண தேசிய விளையாட்டுப் போட்டிகளின் போது தரப்படுகின்ற தவிர்க்க முடியாத ஆடை ஒழுங்குகள் குறித்து இங்கு பேசவில்லை.

அரபு நாடுகளில் ஆங்கிலேய நவநா(ய்)கரீகத்தின் எச்சங்கள் வரிந்து கட்டிக் கொள்ளப் படுகின்றன என்பதற்காக எமது சமய கலாசார தனித்துவங்களை நாம் விட்டுக் கொடுத்து விட வேண்டும் என்பதில்லை!

அரபு நாடுகளில் தொழிலுக்கு சென்றவர்கள் சமூக ஊடகங்களில் பெருமையாக பகிர்ந்து கொள்ளும் படங்களும் இங்குள்ளவர்கள் மனநிலையை பாதித்து வருவதனை உணர முடிகிறது.

அதான் கூறினால் தொழுவதற்கு முடியுமான ஆடைகளை நாம் அணியவும், அவ்ரத் மறைக்கப் படுவதற்கான காரண காரியங்களையும் நோக்கங்கங்களையும் உணர்ந்து, மேலிடத்திலிருந்து அழைப்பு வந்தால் செல்வதற்கு தயாராகவும் எமக்கான விளையாட்டு ஜர்ஸி பொட்டம்ஸ்களை தயாரித்துக் கொள்ள வேண்டும்!

முஸ்லிம் பாடசாலைகள், பழைய மாணவர் அமைப்புகள், முஸ்லிம் மஜ்லிஸுகளும், மஸ்ஜிதுகளும், அனுசரணை வழங்குவோரும் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்!

அண்மைக்காலமாக எல்லா சிறிய பெரிய ஒன்று கூடல்களுக்கும் ஜர்ஸி பொட்டம்ஸ் தயாரிப்பது அதற்காக பணம் விரயம் செய்வதும் ஒரு டிரெண்ட் ஆக மாறி வருகிறது!

ஆக, நாங்கள் முஸ்லிம்கள், வாழ்வு மறுமைக்கானது, எமது சமய கலாசார மரபுகள் குறித்து கரிசனையாக இருப்போம், கரைந்து போகாமல் கலந்து வாழ்வோம்!

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
13.08.2023 

சனி, 8 ஏப்ரல், 2023

ரமழான் சிந்தனை 01

 ரமழான் சிந்தனை 01 

The right Leadership

-  Dr Rauf Zain -


நல்ல தலைமைத்துவம் இல்லாமல் ஒரு சமூகம் உயிர்ப்புடன் நிலைப்பதற்கான வாய்ப்பில்லை. மனித வளங்களை திட்டுமிட்டு உருவாக்கும்போதே நல்ல தலைமை உருவாக்கப்படுவது சாத்தியமாகும். மனித தலைகளை ( human heads) மனித வளங்களாக (human resources) மாற்றும் மூலோபாயத்திட்டத்தில் சமூக நிறுவனங்கள் கவனம்  குவிப்பது இன்றைய காலத்தின் உடனடித் தேவையாகும். தலைவன் இல்லாத சமூகம் மேய்ப்பாளன் இல்லாத மந்தைக்கூட்டம் போன்றது என்ற நபிகளாரின் வாக்கை இன்று நிதர்சனமாகப் பார்க்கிறோம். 2000 மில்லியன் உலக முஸ்லிம்களுக்கு ஒரு தலைமைத்துவம் இல்லை. அதன் விகாரமான விளைவுகளை உலகெங்கும் காண்கிறோம். இது குறித்து நாம் இந்த றமழானில் இருந்தாவது சிந்திப்போமாக!

செவ்வாய், 27 செப்டம்பர், 2022

ஒர் உலக ஜாம்பவானின் மரணம்


அல்லாமா முஜத்தித் முஜ்தஹித் முபஸ்ஸிர்.முஹத்திஸ்  இமாம் கர்ழாவி (றஹ்) வாழ்வும் பங்களிப்பும்


அவரது சிந்தனைகள் கருத்துக்களை முன்வைத்து சில குறிப்புகள் -01


இமாம் யூஸுப் அல் கர்ழாவி அவர்கள் இந்நூற்றாண்டில் வாழ்ந்து மரணித்த முஜத்தித்களில் ஒருவர். இஸ்லாமிய தஃவா களத்தில் சுமார் ஏழு தசாப்த அனுபவங்கள்  கொண்டவர். உலகின் பல்வேறு நாடுகளிலும் பல்லாயிரக்கணக்கான அறிவு ஜீவிகளை உருவாக்கிய பேராசிரியர். கோடிக்கணக்கான முஸ்லிம்களின் உலக ஆதர்ஷம். இஸ்லாமிய நிலைக்களனில் ஓர் உலக நாயகன். அரை நூற்றாண்டுக்கு மேல் தனது பேனை முனையில் போராட்டம் நடாத்திய எழுத்தாளர். கலை இலக்கியத்தில் பேரார்வம் கொண்ட புதுக் கவிஞர். அவரது ஒவ்வொரு நூலையும் வாசிக்க கையில் எடுக்கும் போது ஒரு புதையலுக்குள் புகும் புதிய அனுபவம்.


அறபு உலகைக் கடந்து உலக முஸ்லிம்களால் மதிக்கப்பட்ட மாணிக்கம் அவர். கர்ழாவி அவர்கள் இஸ்லாமிய உலகுக்கு வெளியே சிறுபான்மையாக முஸ்லிம்கள் வாழும் நாடுகளுக்கும் பயணம் செய்தவர்.அவர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு ஷரீஆ அடிப்படையில் தீர்வுத்திட்டத்தை முன்வைத்தவர்.முஸ்லிம்கள் உலகில் எங்கு வாழ்ந்தாலும் இஸ்லாமிய தனித்துவத்துடன் வாழ வேண்டும் என்பதில் அவர் காட்டிய ஆர்வமும் அக்கறையும் தனித்துவமானது. அதனால்தான் சிறுபான்மை வாழ்வியல் குறித்து அவரது பிரத்தியேகமான பிக்ஹுத்துறை ஆய்வுகள் விரிவடைந்தன. அது தொடர்பில் அவர் விரிவாக எழுதினார்.


இத்துறை சார் பிக்ஹு நூல்கள் அரிதிலும் அரிது. மஜ்லிஸுல் அவ்ரூபி லில் புஹூதி வல் பத்வா (ஆய்வுக்கும் பத்வாவுக்குமான அய்ரோப்பிய சபை) உருவாக்கத்திலும் வழி நடாத்தலிலும் அல்லாமா கர்ழாவி அவர்களது பங்கு மெச்சுதலுக்குரியது. அம்மன்றம் அய்ரோப்பிய நாடுகளில் கடந்த மூன்று தசாப்தங்களாக நடாத்தி வந்த ஆராய்ச்சி மாநாடுகளில் உத்வேகத்துடன் பங்குபற்றிய அல்லாமா அவர்கள் அம்மன்றத்தை வழிநடாத்துவதிலும் முன்னணிப் பங்கினை ஆற்றியுள்ளார். இஸ்லாமிய அறிஞர்களின் சர்வதேச ஒன்றியத்தின் தலைவராக இருந்து அன்னார் ஆற்றிய பங்களிப்பும் போற்றுதலுக்குரிய தாகும்.


இஸ்லாமிய சட்டம்,தஃவா, சமுகக்களம், இஸ்லாமிய கலைகள், வரலாறு,படைப்பிலக்கியம், ஆன்மீகம்  என அனைத்துத் தளங்களிலும் மிகுந்த விளை திறனுடன் இயங்கிய இமாம் அவர்கள், இந்த ஒவ்வொரு பரிமாணத்திலும் எழுதியுள்ள நூல்கள் அவரது ஆழமான ஆய்வுகளின் பிரத்தியட்ஷமான புலப்பாடுகளாகவே உள்ளன. குர்ஆன்,சுன்னாஹ், முன்னைய இஸ்லாமிய அறிஞர்கள்,சட்டவியலாளர்கள், என ஆதாரங்களை அடுக்கும் அவரது எழுத்துப்பாங்கு அவருக்கேயுரிய தனித்தன்மையாகும். வரைவிலக்கணத்திலிருந்து தொடங்கி வரலாற்று வழியாக நகர்ந்து ஷரீஆவின் வரையறைகளை முன்னிறுத்தி தர்க்க ரீதியாக முடிவுறுத்தும் அந்த எழுத்து மிகுந்த சுவாரஸ்யம் கொண்டது. வாசிக்கும்போதுதான் அந்த இன்பத்தை அனுபவிக்கலாம். ஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி (றஹ்) அவர்களது எழுத்துக்கும் கர்ழாவி அவர்களது எழுத்துக்கும் இடையிலான விலகல் புள்ளிகளில் இதுவும் ஒன்று.


வேதனையாய் வேதனையாய்

வெளியாகிறது!

இவ்வேதம்

கிழக்கிலும் மேற்கிலும்

ஒளிபாய்ச்சும் சூரியனாய்

வழிகாட்டுகிறது! ஆனால்

முஸ்லிம்களோ குருடர்கள் போல்

குமைந்து நிற்கிறார்கள்.


நபஹாத் வலபஹாத் என்ற அவரது தொகுதியில் உள்ள இந்தக்கவிதை அடிகள் முஸ்லிம்களுக்கும் குர்ஆனுக்குமிடையே இன்று நிலவும் பலவீனமான உறவைப் படம்பிடித்துக் காட்டுகிறது. இந்த மார்க்கம் வாழ நான் சிரித்துக் கொண்டே மரணிப்பேன் என்ற தலைப்பில் அவர் சூடானில் நடந்த இலக்கியச் சந்திப்பில் பாடிய கவிதையும் மிக அற்புதமானது. 

சமகால முஸ்லிம் உம்மாவின் வீழ்ச்சி நிலை கண்டு அவர் மனம் வெம்பினார்.


சமூக மாற்றம் மற்றும் சீர்திருத்தம் குறித்து மர்ஹூம் முஹம்மத் அல்கஸ்ஸாலி அவர்கள் கொண்டிருந்த அதே கண்ணோட்டத்தையே இமாம் அவர்களும் கொண்டிருந்தார். குற்றுயிராய் வீழ்ந்து கிடக்கும் இஸ்லாமிய சமூகத்தை தூக்கி நிலைநிறுத்தும் முதன்மை ஆயுதம் முஸ்லிம் சமூகம் குறித்த சுயவிமர்சனமே என்பதில் இமாம் அவர்கள் ஆழமாக நம்பிக்கை கொண்டிருநதார். அதன் பிரதிபலிப்பே கோளாறு எங்கே என்ற அவர்களது நூலாகும்.அந்நூலில் சமூகப்பின்னடைவுக்கான மூல காரணங்களை விமர்சனபூர்வமாக அவர் ஆராய்கிறார்.


அவரது வாழ்வும் வகிபங்கும் நம் எல்லோருக்கும் ஒரு முன்மாதிரியான பாடமாகும். தனது இரண்டாவது வயதில் தந்தையையும் பதினான்காவது வயதில் தாயையும் இழந்த ஒருவர், இந்த இமயத்தை எப்படி எட்டினார்? என்பது ஆச்சரியமான கேள்விதான். கிராமப்புறமொன்றில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து, அனாதையாக வளர்ந்து ,வறுமையோடு போராடிப் போராடி, பெரும் புயல் வீசும் தருணங்களில் அலைகள் மீது தாவித் தள்ளாடி வாழ்க்கைக் கடலில் கரை சேர்ந்த அவரது பயணம், எத்துணை மகத்தானது என்பதை எளிதில் ஊகிக்கலாம். விளையும் பயிரை முளையில் தெரியும் என்பதுபோல் அவரது கல்வி ஈடுபாடும் பேரார்வமும் அவரது எதிர்கால இமயத்தின் தீர்க்க தரிசனமாய் தெரிந்தது.


அவர் எதிர்நோக்கிய வறுமை அவரை அவரது கல்விப் பயணத்திலிருந்து

தடுத்து நிறுத்த அவர் அனுமதிக்கவில்லை. தனக்கு முன்னால் குவிந்த அத்தனை வாய்ப்புகளையும் அவர் பயன்படுத்தினார். அல் அஸ்ஹரின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனத்தில் இணைந்து ஆரம்பக்கல்வியை த்தொடர்ந்தார். அடைவுகளில் எப்போதும் முன்னணி மாணவராக திகழ்ந்தார். உயர்தரப் பரீட்சையில் இரண்டாம் இடத்தைப் பிடித்த அவர்கள், அல் அஸ்ஹர் உஸூலுத்தீன் பீடத்தில் இணைந்து 1953 இல் பட்டதாரியாக வெளியேறினார். அவரது வகுப்பில் அப்போது 180 மாணவர்கள் . அவர்தான் முதற்தர சித்தி (First Class)யைப் பெற்றார்.


1957 இல் மொழித்துறை மற்றும் இலக்கியத்திற்கான உயர்கல்வி நிறுவனத்தின் டிப்ளோமா பட்டம் பெற்றார். 1960 இல் உஸூலுத்தீன் பீடத்தில் குர்ஆன் ஹதீஸ் துறைகளில் முதுகலைக்குச் சமாந்திரமான உயர்கல்வித் சான்றிதழ் அவருக்கு வழங்கப்பட்டது. 1973 இல் 'ஸகாத்தும் சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அதன் பங்கும் ' எனும் தலைப்பில் மேற்கொண்ட ஆய்வுக்காக கலாநிதிப்பட்டம் பெற்றார்கள்.


கர்ழாவி இமாம் அவர்களது ஒவ்வொரு துறை சார் பங்களிப்பு குறித்தும் இந்தப்பத்தியில் எழுத எண்ணுகிறேன் இன்ஷா அல்லாஹ்!


தொடரும்

கலாநிதி றவூப் ஸெய்ன்

2022.09.27.

திங்கள், 22 ஆகஸ்ட், 2022

ஒரு மனிதன் ஒரு வாழ்வு

ஒரு மனிதன் ஒரு வாழ்வு

( கலாநிதி றவூப் ஷெய்ன்)










வெள்ளி, 14 டிசம்பர், 2018

துரோகத்தால் எழுதப்பட்ட வரலாறு

நளீம் ஹாஜியார் மீதான குற்றச்சாட்டு.


1974ம் ஆண்டு சிரிமாவோ பண்டாரநாயக அரசு அந்நியச் செலாவனி நெருக்கடிக்கு உடபட்ட போது மர்ஹூம் நளீம் ஹாஜியார் அவர்கள் அன்றை அரசுக்கு பதினைந்து இலட்சம் ரூபா (15,000,00/=) அந்நியச் செலவானி உதவியளித்து நாட்டின் அந்நிய செலவாணி நெருக்கடி பிரச்சனை தீர்வுக்கு பங்களித்தார்கள். இதுவே வரலாற்றில் பதியப்பட்ட சிறந்த தேசப்பற்றுக்கான எடுத்துக்காட்டாக அமைந்தது.

வெள்ளி, 30 நவம்பர், 2018

ஆட்சியும் அதிகாரமும் புகழும் மாட்சிமையும் எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கு உரியன, அவன் தான் நாடியவர்களுக்கு அவற்றைக் கொடுப்பான்

- அஷ் ஷேஹ் இனாமுல்லாஹ் மஸீஹுதீன் -
 அதிகாரமும் புகழும் மாட்சிமையும் எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கு உரியன, அவன் தான் நாடியவர்களுக்கு அவற்றைக் கொடுப்பான், தான் நாடியவர்களிடமிருந்து அதனைப் பறித்து எடுப்பான், என்று நாங்கள் விசுவாசம கொள்கிறோம்.

"(நபியே! பிரார்த்தித்து) நீர் கூறுவீராக: அல்லாஹ்வே (இம்மை மறுமையின் சகல) ஆட்சிக்கும் அதிபதி! நீ நாடியவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; நீ நாடியவரிடமிருந்து ஆட்சியைப் பறித்தும் விடுகின்றாய்; மேலும் நீ நாடியவரை கண்ணியப்படுத்துகின்றாய்; இன்னும் நீ நாடியவரை இழிவு படுத்துகின்றாய்; நன்மை(யாவும்) உன் கைவசமே (இருக்கின்றன). நிச்சயமாக, நீ ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்". (ஸுரத் ஆல இம்ரான் 3:26)

வியாழன், 29 நவம்பர், 2018

வேதம் இறங்கிய நாட்களில் முஸ்லிம் பெண்


கலாநிதி இஸாம் அல்-பஷீர் அவர்கள் எழுதிய அல்-மர்ஆ அல்-முஸ்லிமா பீஃ அஸ்ரித் தன்ஸீல் என்ற நூலினை ‘வேதம் இறங்கிய நாட்களில் முஸ்லிம் பெண்’ என்ற தலைப்பில் பகுதி பகுதியாக மொழிபெயர்த்து சமூக வலைத்தளத்தில் பதிவிடலாம் எனக் கருதி ஆரம்பித்திருக்கிறேன்.

வியாழன், 30 ஆகஸ்ட், 2018

இளைஞர்களை புரிந்து கொள்ளுங்கள்…..

 இக்ராம் நசீர்
 நாம் பள்ளிவாயிலுக்கு வந்த போது எம்மை அங்கு வரக்கூடாது என்றீர்கள்… நாம் ஸப்புகளில் நின்றால் எமது கால்களுக்கிடையே ஷைத்தான் புகுந்து வருவதாகக் கதை சொன்னீர்கள்… நாம் சுவனத்து றோஜாக்கள் என்பது அப்போது உங்களுக்குத் தெரியவில்லை…

வியாழன், 2 ஆகஸ்ட், 2018

ஊரோடு கலந்து வாழ்ந்த சமூக செயற்பாட்டாளர்

மர்ஹும் முஹம்மது முஸ்தபா ஹாஜியார்:

உலகில் எத்தனையோ மனிதன் பிறக்கிறான், இறக்கிறான் இதுவொரு  சுழலும் செயற்பாடாக உள்ளது. பிறக்கும் எல்லா மனிதர்களும் சம்பவமாகி விடுவதில்லை. அவற்றை எல்லாம் கடந்து மர்ஹும் முஹம்மது முஸ்தபா ஹாஜியார் இறக்காமம், அமீரலிபுரம் ஆகிய ஊர்களின் சரித்திரமாகிறார்.

செவ்வாய், 21 ஜூன், 2016

எகிப்து நாட்டு மருத்துவர் பேராசிரியர் “அப்துல் பாஸித் முஹம்மத்” என்பவர் “கண் வெண்மையாதல்” நோய்க்கு குர்’ஆன் அடிப்படையில் மருந்து கண்டு பிடித்துள்ளார்

எகிப்து நாட்டு மருத்துவர் பேராசிரியர் “அப்துல் பாஸித் முஹம்மத்” என்பவர் “கண் வெண்மையாதல்” நோய்க்கு குர்’ஆன் அடிப்படையில் மருந்து கண்டு பிடித்துள்ளார் என்று கத்தார் நாட்டின் “அர்-ரயா” பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அச்செய்தி மேலும் கூறுவதாவது:

வெள்ளி, 6 மே, 2016

துருக்கிய அரசாங்கத்தினதும் தலைமைத்துவத்திலிருந்து விலகுவதாக துருக்கியப் பிரதமர் தாவூத் ஒக்லூ

அர்துகான் ஒர அரசியல் ராஜதந்திரியை இழக்கிறார். கட்சியினதும் துருக்கிய அரசாங்கத்தினதும் தலைமைத்துவத்திலிருந்து விலகுவதாக துருக்கியப் பிரதமர் தாவூத் ஒக்லூ விடுத்துள்ள அறிவிப்பு அரசியல் களத்தில் ஒரு கொந்தளிப்பை

முன்னாள் அமைச்சர் அல்ஹாஜ், எம்.எச்.எம். நெய்னா மரைக்கார் அவர்களின் நூறாவது பிறந்ததினம்

  தகவல்: அல்ஹாஜ், எம்.ஐ. எம். அப்துல் லத்தீப்.

முன்னாள் அமைச்சர்  அல்ஹாஜ், எம்.எச்.எம். நெய்னா மரைக்கார் அவர்களின் நூறாவது பிறந்ததினம் 2017 ல்.
28 வருடங்கள் புத்தளம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராகவும்  இக்காலப் பகுதியில் உதவிநீதி அமைச்சர் ,

வியாழன், 5 மே, 2016

அமைச்சர் றிசாத் நோர்வே தேர்தல் நிபுணர் வொலன்ட் சந்தித்தார்.

உலக நாடுகள் பலவற்றின் தேர்தல் மறு சீரமைப்பு மற்றும் அரசியல் அமைப்பு தொடர்பான விடயங்களில் ஆர்வம் காட்டி அதற்கு உதவி வரும் நோர்வே நிபுணரான ஆர் எம் வொலன்ட் இன்று கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிசாத்  பதியுதீனை அவரது அமைச்சின் அலுவலகத்தில் சந்தித்து பேசியுள்ளார்.
மாற்றுக்கொள்கைகளுக்கான தேசிய நிலையத்தின் அழைப்பின் பேரில் இலங்கை வந்துள்ள நிபுணர் ஆர் எம் வொலன்ட் இலங்கையில் கொண்டுவரப்படவுள்ள புதிய தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பில் தனது கருத்துக்களையும் ஆவண ரீதியான சான்றுகளையும் அமைச்சரிடம் முன்வைத்தார்.
நேபாளம் போன்ற தென் கிழக்காசிய நாடுகளில் பரீட்சித்துப்பார்த்து வெற்றி கண்ட முறைகளையும் தனது அனுபவங்களையும் விரிவாக விளக்கி இருந்தார்.
தேர்தல் மறுசீரமைப்பில் தமது கட்சி முன்னெடுத்து வரும் திட்டங்களை விளக்கிய அமைச்சர் ரிசாத்  சிறுபான்மை மக்களுக்கு புதிய முறைமையினால் எத்தகைய பாதிப்புகளும் வரக்கூடதென்பதில் தெளிவாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
நாட்டுத்தலைவர்களிடம் இது தொடர்பில் தமது கட்சி சுட்டிக்காட்டியிருப்பதாக குறிப்பிட்டஅவர், சிறுகட்சிகளான ஜே.வி.பி, ஹெல உறுமய ஆகியவற்றுடனும் சிறுபான்மைச் சகோதரக் கட்சிகளுடனும் தாங்கள் பேச்சு நடாத்திவருவதாகவும் குறிப்பிட்டார்.
குறித்த சந்திப்பில் பங்கேற்ற கட்சியின் செயலாளர் நாயகம் சுபைர்தீன், சிறுபான்மை மக்களுக்கு உகந்த தேர்தல் முறைகள் தொடர்பில் விளக்கமளித்தார்.(

செவ்வாய், 3 மே, 2016

இன்று பாராளுமன்றத்தில் கூச்சல்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிலர் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்தீப் சமரசிங்க மீது தாக்குதல் மேற்கொண்டதை அடுத்து அவர், தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.